EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐபிஎல் அணி வீரர்களின் உள்ளே, வெளியே ஆட்டம்: அட்டவணை மாற்றத்தின் தாக்கம் | foreign players in and pull out in ipl 2025 Impact of schedule change


சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நாளை (மே 17) முதல் எஞ்சியுள்ள ஆட்டங்கள் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பல்வேறு அணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் பதற்றம் காரணமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்புவதில் நிலவும் சிக்கல், தேசிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள வீரர்கள், காயத்தால் விலகிய வீரர்கள் விட்டுச்சென்ற வெற்றிடங்களை அணிகள் நிரப்ப வேண்டி உள்ளது.

இதற்காக பிரத்யேக விதியை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக அணிகள் இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் மட்டும் விளையாடும் வகையில் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியும். இது ஐபிஎல் அணிகளுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.

யார் உள்ளே, யார் வெளியே? ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்துள்ள மாற்று வீரர்கள் யார் என்பதை பார்ப்போம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் ஜாஸ் பட்லர், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவருக்கு மாற்றாக இலங்கையைச் சேர்ந்த குஷால் மென்டிஸை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது அந்த அணி. இதன் மூலம் முதல் முறையாக அவர் ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். வரும் 26-ம் தேதி அந்த அணியுடன் அவர் இணைகிறார்.

காயம் காரணமாக விலகியுள்ள ஃபெர்குசனுக்கு மாற்றாக ஜேமிசனை ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதே போல லக்னோ அணியின் அதிவேக பவுலர் மயங்க் யாதவ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக வில்லியம் ஓ’ரூர்க்கை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

காயம் காரணமாக மேக்ஸ்வெல் விலகியுள்ள நிலையில் மிட்ச் ஓவனை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் அவர் விளையாடி இருந்த நிலையில், தற்போது பஞ்சாப் அணி உடன் இணைந்துள்ளார். பஞ்சாப் அணி இந்த ஆல்ரவுண்டரின் செயல்பாடு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

ரஜத் பட்டிதார்: நடப்பு சீசனில் போட்டியின் போது காயமடைந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், இந்த சீசனில் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்தச் சூழலில் அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அவரது வருகை அந்த அணிக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளது. படிக்கல்லுக்கு மாற்றாக அணியில் இடம்பெற்றுள்ள மயங்க் அகர்வாலும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலியும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார்.

காயம் காரணமாக தவித்து வரும் ஜோஷ் ஹேசில்வுட், எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட ஆர்சிபி அணியில் இணைவாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதேபோல டெல்லி அணியில் ஸ்டார்கே இணைவது குறித்த தகவலும் உறுதிப்படுத்தாமல் உள்ளது. டெல்லி அணி மாற்று வீரராக வங்கதேசத்தின் முஸ்தபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.