‘பணமா? பாதுகாப்பா?’ – ஐபிஎல் விளையாடும் ஆஸி. வீரர்களுக்கு மிட்செல் ஜான்சன் அறிவுரை | Money or Security Mitchell Johnson advice to australia players IPL 2025
மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்று விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். “ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது தொடர்பாக வீரர்கள் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
விளையாட வேண்டாம் என வீரர்கள் முடிவு செய்தால் அது அவர்களுக்கு நிதி இழப்பு, தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த வாய்ப்பு, ஏமாற்றம் உள்ளிட்டவற்றை தரலாம். இது அனைத்துக்கும் மேலாக பாதுகாப்பு தான் மிகவும் முக்கியமானது. இந்த முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நான் இருந்தால் அதை எளிதில் செய்வேன்.
பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன். இது எனது தனிப்பட்ட முடிவு. எந்தவொரு வீரரும் ஐபிஎல் அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியாக வேண்டுமென்ற அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது.
மேலும், ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஒரு வார காலத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் தயாராக வேண்டி உள்ளது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என ஜான்சன் கூறியுள்ளார்.