தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி | Thailand Open Badminton Lakshya Sen loses in first round
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார். அதேவேளையில் ஆகர்ஷி காஷ்யப், உனதி ஹூடோ ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், அயர்லாந்தின் நஹட் நுயனுடன் மோதினார். ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானிடம் தோல்வி கண்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என்ற செட் கணக்கில் போராடி ஜப்பானின் கவுரு சுகியாமாவையும், உனதி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் தமோன்வான் நிதித்திக்ரையையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரக்சிதா 18-21, 7-21 என்ற நேர் செட் கணக்கில் போட்டி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் யோ ஜியா மினிடம் தோல்வி அடைந்தார்.