‘கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர்’ – அஸ்வின் ‘டிக்’ செய்வது ஏன்? | ashwin backs bumrah for team india test captaincy role
சென்னை: அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை ஆதரித்துள்ளார் அஸ்வின்.
“இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும். பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள அணியில் இடம்பெறுகின்ற அனுபவ வீரர்களில் ஒருவராக பும்ரா இருப்பார். அவர் அணியின் கேப்டன்சி ஆப்ஷனிலும் நிச்சயம் இருப்பார். கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால், தேர்வு குழுவினர் அவரது உடற்திறனை கருத்தில் கொண்டு அது தொடர்பாக முடிவு செய்யும் என தெரிகிறது” என அஸ்வின் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இப்பொது இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக அணியை வழிநடத்தினார் பும்ரா. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தது. தொடர்ந்து கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பும்ரா தலைமையிலான இந்திய அணி வாகை சூடி இருந்தது. இந்த நிலையில் தான் டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கு பும்ராவை அஸ்வின் ஆதரித்துள்ளார்.