EBM News Tamil
Leading News Portal in Tamil

காயத்தால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அவதி | RCB captain Rajat Patidar suffers injury


பெங்களூரு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் அவர், பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு அணிக்கு இந்த ஆட்டம் உட்பட 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் பெங்களூரு அணி ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இந்நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 3-ம் தேதி சிஎஸ்கே அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பீல்டிங்கின் போது ரஜத் பட்டிதாருக்கு கை விரல் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய அதிக நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் இரு ஆட்டங்களையாவது ரஜத் பட்டிதார் தவறவிடக்கூடும். பிளே ஆஃப் சுற்று தொடங்குவதற்குள் அவர், காயத்தில் முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்புகள் குறைவே என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அநேகமாக எஞ்சிய ஆட்டங்களில் பெங்களூரு அணியை ஜிதேஷ் சர்மா வழிநடத்தக்கூடும். ஏற்கெனவே காயம் காரணமாக தேவ்தத் படிக்கல் விலகியிருந்தார். வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட், லுங்கி நிகிடி ஆகியோர் மீண்டும் அணியுடன் இணைவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் பெங்களூரு அணிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும்.