EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆர்சிபி ‘சாம்பியன் கனவு’க்கு பின்னடைவு: முக்கிய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்? | key players participating issue RCB s championship dream in danger ipl 2025


பெங்களூரு: 18-வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் சாம்பியன் கனவு நிறைவேறும் சூழல் இருப்பதாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அந்த அணிக்கு இந்த சீசனிலும் இல்லை என்பது போன்ற சூழல் எழுந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் வரும் 17-ம் தேதி முதல் நடப்பு சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களில் சிலர் எஞ்சியுள்ள சீசன்களில் விளையாடுவது சிக்கலாகி உள்ளது. சில வீரர்களுக்கு காயம் மற்றும் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் சீசனில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் ஏற்கெனவே காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். ஹேசில்வுட் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோரின் உடற்தகுதியும் அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. இதில் ஹேசில்வுட் தாயகம் திரும்பிவிட்டார். மேலும், ஜூன் 11-ம் தேதி தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளார். அதனால் அவர் மீண்டும் ஆர்சிபி அணிக்காக இந்த சீசனில் ஆடுவது சந்தேகமே.

இங்கிலாந்தை சேர்ந்த பிலிப் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோரும் தாயகம் திரும்பி உள்ளனர். அவர்கள் இருவரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான இங்கிலாந்து அணி விளையாடும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் மே 29-ம் தேதி தொடங்குகிறது.

இதேபோல ரொமாரியோ ஷெப்பர்டும் அயர்லாந்து அணி உடனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடும் தொடரில் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த தொடர் மே 21-ம் தேதி ஆரம்பமாகிறது. இவர்கள் போக எஞ்சியுள்ள வெளிநாட்டு வீரர்கள் ஆர்சிபி அணிக்காக விளையாட உள்ளனர். தற்போது புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது ஆர்சிபி. எனவே, தற்போதைய நிலையில் ஆர்சிபி அணியின் சாம்பியன் கனவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது தெளிவு. இதனை எதிர்கொண்டு வெற்றி நடையை ஆர்சிபி அணி தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.