அதிக இரட்டை சதங்கள் முதல் வெற்றிகரமான கேப்டன்சி வரை: விராட் கோலியின் வியத்தகு சாதனைகள்! | Kohli in Tests: Six double-tons in 18 months, and India most successful captain
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவுதூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னை செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தப் பாடங்களை நான் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வேன்.
வெள்ளை நிற உடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எளிதானது அல்ல. ஆனால், இந்தக் கடினமான முடிவை நான் சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் என்னால் இயன்றதை எல்லாம் கொடுத்துள்ளேன். பதிலுக்கு அது எனக்கு நான் எதிர்பார்க்காததை எல்லாம் தந்தது.
இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கும், என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி. என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி 14 ஆண்டுகால தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். 30 சதங்கள், 31 அரை சதங்கள் விளாசியுள்ளார்.
கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார். 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற டெஸ்டில் 254 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 2 வருடங்களாக அவரது சராசரி 32-ஐ தாண்டவில்லை.
விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் இந்தியா 40 வெற்றி, 17 தோல்விகளை பதிவு செய்திருந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் விராட் கோலி.
இதற்கு முன்னர் எம்.எஸ்.தோனி 60 போட்டிகளில் கேப்டனாக இருந்து 27 வெற்றிகளையும், சவுரவ் கங்குலி 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
உலக டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றகளை தேடிக்கொடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்திருந்தார். இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் (109 போட்டிகள், 53 வெற்றிகள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (77 போட்டிகள், 48 வெற்றிகள்), ஸ்டீவ் வாஹ் (57 போட்டிகள், 41 வெற்றிகள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.
விராட் கோலியின் சாதனைகள்: 2011-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஜமைக்காவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் விராட் கோலி.
2012-ம் ஆண்டு ஜனவரியில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசியிருந்தார் விராட் கோலி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் அதிக முறை இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் போது கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. அந்த போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 115 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 141 ரன்களும் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21-ம் ஆண்டு சுழற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தை பிடித்திருந்தது.
விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் தொடர்ச்சியாக 42 மாதங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி 11 தொடர்களில் 10-ஐ வென்று அசத்தியது.
விராட் கோலி சாதனைகளில் மணிமகுடமாக 2018–19–ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–1 என வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது அப்போதுதான். இதன் மூலம் 71 வருட காத்திருப்புக்கு முடிவு கிடைத்திருந்தது.
அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய சாதனை விராட் கோலி வசம் உள்ளது. அவரது தலைமையில் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடி 40 வெற்றிகளை குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய கேப்டன்களில் அதிக வெற்றியை தேடிக்கொடுத்தவர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே உள்ளது.
இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலியின் வசம் உள்ளது. அவர், 68 போட்டிகளில் கேப்டனாக இருந்து 54.80 சராசரியுடன் 5,864 ரன்கள் குவித்துள்ளார். இதில் 20 சதங்கள், 18 அரை சதங்கள் அடங்கும்.
2019-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 254* ரன்கள் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் பட்டியலில் விராட் கோலி (9,230 ரன்கள்) 4-வது இடத்துடன் தனது 14 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சச்சின் உருக்கம்: சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பதிவில், “12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளிக்க முன் வந்தீர்கள். அந்தச் செயல் மனதைத் தொடும் விதமாக இருந்தது, அன்றிலிருந்து அது எனக்குள் இருந்து வருகிறது.
வெறும் ரன்களை மட்டும் அல்லாமல் அதற்கு மேல் பலவற்றையும் இந்திய கிரிக்கெட்டுக்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். புதிய தலைமுறை வீரர்கள், ரசிகர்களை கொண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய ஸ்பெஷலான டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பார்க்காத போர்: விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதள பதிவில், “எல்லோரும் உங்களுடைய சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் நீங்கள் ஒருபோதும் காட்டாத கண்ணீர், யாரும் பார்க்காத போர்கள் மற்றும் இந்த விளையாட்டு வடிவத்துக்கு நீங்கள் கொடுத்த அசைக்க முடியாத அன்பு ஆகியவையே எனக்கு நினைவில் இருக்கும். இதெல்லாம் உங்களிடமிருந்து எவ்வளவு எடுத்தது என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்குப் பிறகும், நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் பணிவாகவும் திரும்பி வந்தீர்கள், நீங்கள் அதையெல்லாம் கடந்து பரிணமிப்பதைப் பார்ப்பது ஒரு பாக்கியம். நீங்கள் எப்போதும் உங்கள் மனதை பின்பற்றினீர்கள், அதனால் நான் என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன், இந்த விடைபெறுதலின் ஒவ்வொரு துளியையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள்’’ என்றார்.
ஜெய் ஷா (ஐசிசி தலைவர்): விராட் கோலியின் சிறப்பான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். டி 20 கிரிக்கெட்டின் எழுச்சியின் போது தூய்மையான வடிவத்தை ஆதரித்ததற்கும், ஒழுக்கம், உடற்தகுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் அசாதாரண முன்மாதிரியாக அமைந்ததற்கும் நன்றி. லார்ட்ஸில் உங்கள் உரை அனைத்தையும் கூறியது – நீங்கள் இதயப்பூர்வமாகவும், மன உறுதி மற்றும் பெருமையுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளீர்கள்.
பிசிசிஐ: நன்றி விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது, ஆனால் அந்த மரபு என்றென்றும் தொடரும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும்.
தோனி பாணி: கங்குலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியதில் தோனி பெரும் பங்கு வகித்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோனி, சமூக வலைளத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போது இதே பாணியை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் கடைபிடித்துள்ளனர்.
3-வது சீனியர்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களில் 3 முக்கியமான வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார். கடந்த வாரம் ரோஹித் சர்மா விடை பெற்றார். இந்த வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.