ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்: ஆறு இடங்களில் நடத்த பிசிசிஐ திட்டம்! | TATA IPL 2025 action is all set to resume on 17th May
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஆறு இடங்களில் நடத்துவது என்றும், ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவாலிஃபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிஃபையர் 2 – ஜூன் 1
ஃபைனல் – ஜூன் 3
போட்டிகள் நடக்கும் ஆறு இடங்கள் எவை என்பது குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.