36 வயதினிலே… விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைத் தடங்கள்! | virat kohli test cricket retirement and records explained
‘மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாமல் போகலாம்’ என கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலி பேசி இருந்தார். 36 வயதினிலே இப்போது ஓய்வை அறிவித்துவிட்டார். அவருக்கு உலக கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகளை போற்றி வருகின்றனர். நெருக்கடியான தருணத்திலும் சவாலான சூழலிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து அணியை காத்தவர் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் குறித்து பார்ப்போம்.
மைல்கல் சாதனைகளுக்காக விளையாடாதவர் கோலி. அதுவொரு சிறந்த உதாரணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மொத்த ரன்கள். 210 டெஸ்ட் இன்னிங்ஸில் 9,230 ரன்களை எடுத்துள்ளார். மைல்கல் சாதனைக்காக விளையாடுபவர் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 இலக்க ரன்களோடு ஓய்வு பெற்றிருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. கிரிக்கெட் உலகத்தின் Fab 4-களில் ஒருவரான கோலி இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மூவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள். அதெல்லாம் கோலி கணக்கில் கூட கொள்ளவில்லை.
இத்தனைக்கும் இந்திய கிரிக்கெட்டில் ஃபிட்டான வீரர்களில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் கோலி. அதை வைத்து பார்த்தால் எப்படியும் 2027 வரையில் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் உடற்குதியோடு உள்ளார். இருந்தாலும் ஓய்வை அறிவித்துள்ளார்.
“14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவு தூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னைச் செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தப் பாடங்களை நான் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வேன்.
வெள்ளை நிற ஆடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எளிதானது அல்ல. ஆனால், இந்தக் கடினமான முடிவை நான் சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் என்னால் இயன்றதை எல்லாம் கொடுத்துள்ளேன். பதிலுக்கு அது எனக்கு நான் எதிர்பார்க்காததை எல்லாம் தந்தது. இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கு, என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி. என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அறிமுகம்: 21-ம் நூற்றாண்டில் அறிமுகமான இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரன்களை எடுத்தவர் கோலி தான். கடந்த 2011-ல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக கோலி களம் கண்டார். அங்கிருந்து அவரது ஆட்டம் ஒவ்வொரு போட்டியாக மேம்பட்டது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய 269-வது வீரர் கோலி.
“கோலி பேட்டிங் செய்வதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ஆக்ரோஷம் பிடிக்கும். என்னை போலவே கிரிக்கெட் மீது தீவிரமான ஆர்வம் கொண்டவர். அவர் என்னையே எனக்கு நினைவூட்டுகிறார்” என கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கோலியை பாராட்டி இருந்தார்.
முதல் அரை சதத்தை 6-வது டெஸ்ட் இன்னிங்ஸிலும், முதல் சதத்தை 14-வது இன்னிங்ஸில் எடுத்தார். அதன் பின்னர் ‘நோ லுக்கிங் பேக்’ என்ற பாணியில் அவரது ஆட்டம் இருந்தது. உள்ளூர், வெளியூர் என ‘நானொரு சிறந்த ஆட்டக்காரர்’ என்பதை கோலி நிரூபித்தார். அதன் மூலம் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
கேப்டன் கோலி: கடந்த 2014-ல் ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார் அணியின் அப்போதைய கேப்டன் தோனி. அந்த தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் கோலி கேப்டன் ஆனார். கேப்டனாக முதல் போட்டியில் சதம் பதிவு செய்தார். இந்த சாதனையை செய்த நான்காவது இந்திய கேப்டன் என அறியப்பட்டார்.
அதிக இரட்டை சதங்கள் (7 சதங்கள்) பதிவு செய்த இந்திய கேப்டன், அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் (ஒரு இன்னிங்ஸில் 254, மொத்தமாக 5.864 ரன்கள்), இந்திய கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தவர் கோலி. அதில் 40 ஆட்டங்களில் இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன், அதிக சதங்கள் (20 சதங்கள்) பதிவு செய்த இந்திய கேப்டன் என அவரது சாதனைகளை பட்டியலிடலாம்.
கோலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்: 2014-ல் அடிலெய்ட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி சாதனை படைத்தார். 364 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அந்த ஆட்டத்தில் இந்தியா விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் 141 ரன்களை எடுத்தார். இருப்பினும் இந்தியா அதில் 48 ரன்களில் தோல்வியை தழுவியது.
2018-ல் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியனில் எடுத்த 153 ரன்கள் மகத்தானது. அந்த இன்னிங்ஸில் 10-வது ஓவரில் களத்துக்கு வந்து கடைசி பேட்ஸ்மேனாக ஆட்டமிழந்தார். அதே தொடரில் ஜோகன்ஸ்பர்கில் 106 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அசத்தினார். சவாலான ஆடுகளத்தில் எடுக்கப்பட்ட ரன்கள் அது. அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதே ஆண்டு இங்கிலாந்தில் 149 ரன்கள் எடுத்தார்.
2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகினார். எப்படியும் சில ஆண்டுகள் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் ஓய்வு பெற்றுள்ளார்.
14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் கோலி எடுத்துள்ளார். கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியில் கோலி 100 ரன்கள் எடுத்தார். ஜூலை 2023-க்குப் பிறகு கோலி டெஸ்ட்டில் எடுத்த முதல் சதமாக அது அமைந்தது. 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் 254 ரன்கள் எடுத்ததுதான் அவரது கரியர் பெஸ்ட் ஸ்கோர்.
கோலியின் பெரிய சாதனை என்னவெனில், கேப்டனாக உலக அளவில் 4-வது சிறந்த கேப்டனாக கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.
ஹேப்பி ரிட்டையர்மெண்ட் கோலி!