ரோஹித் சர்மாவை விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிட்ட சுனில் கவாஸ்கர்: ஒப்பீடு சரியா? | sunil gavaskar compares rohit sharma with viv richards is that right
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்ததையடுத்து சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களை எடுத்துள்ளார்.
24 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரோஹித், அதில் 12-ல் வெற்றி கண்டுள்ளார். 9 போட்டிகளில் தோற்றுள்ளார். 2023-ல் இந்திய அணி அவரது கேப்டன்சியில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்கியது நினைவிருக்கலாம்.
ரோஹித் 3 இரட்டைச் சதங்களை ஒருநாள் போட்டியில் அடித்திருக்கலாம். அவரது அணுகுமுறை ஆக்ரோஷமாக இருக்கலாம், அதற்காக விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிடுவது என்பதெல்லாம் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்த சுனில் கவாஸ்கருக்கு அடுக்குமா என்பதுதான் நம் கேள்வி.
முதலில் ரோஹித் குறித்து சுனில் கவாஸ்கர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்: கிரிக்கெட்டில் விவ் ரிச்சர்ட்ஸ் ஆடுவதை பார்க்கும் பாக்கியம் எனக்கு உண்டு. விவ் ரிச்சர்ட்ஸ் ஆடும் புல் ஷாட்டை அதே போல் ரோஹித் சர்மா ஆடுகிறார். இதைப் பார்க்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. விவ் ரிச்சர்ட்ஸ் அந்த ஷாட்டை ஸ்கொயர் லெக் முதல் வைட் மிட் ஆன் வரை புல் ஷாட்களை ஆடுவார். பந்தை ‘பவுன்ஸ்’ ஆகும் இடத்திலிருந்தே சந்திப்பார் விவ் ரிச்சர்ட்ஸ். ரோஹித் சர்மா பவுன்ஸுக்கு அடியில் மட்டையைக் கொடுத்து மிட்விக்கெட் அல்லது பைன் லெக்கில் தூக்கி சிக்ஸர்கள் விளாசுகிறார்.
பந்துகள் சிக்ஸர்களுக்குப் பறக்கடிக்கப்படுவது பவுலர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதோடு அவர்களது உற்சாகத்தையும் உணர்வையும் உத்வேகத்தையும் காலி செய்து விடக்கூடியது. ரோஹித், விவ் ரிச்சர்ட்ஸ் இருவரிடமும் பிற ஷாட்களும் உள்ளன. ஆனால், இருவரிடமும் உள்ள தனித்துவ ஷாட் புல் ஷாட்.
2021-ல் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சை ரோஹித் எதிர்கொண்டு ஆடும்போது, பந்து வீசப்பட்ட பிறகு தன் ஹெல்மெட்டைக் கழற்றி விட்டு, தலையை வாரிக்கொண்டு, மீண்டும் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு பந்தை அடிக்கலாம் என்று கூறியதாக நினைவு. அவ்வளவு நேரம் அவருக்கு இருக்கிறது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்பின்னர்களை ஆடுவது போல் ஆடுகிறார். இவ்வாறு கூறியுள்ளார் கவாஸ்கர்.
ஆனால், ஒரு முக்கியமான பெரிய வித்தியாசத்தை சுனில் கவாஸ்கரே சொல்லாமல் விட்டதுதான் ஆச்சரியம். விவ் ரிச்சர்ட்ஸ், டெனிஸ் லில்லி, தாம்சன், லென் பாஸ்கோ, ராட்னி ஹாக், மெர்வ் ஹியூஸ், மெக்டர்மட், கிறிஸ் ஓல்ட், பாப் வில்லிஸ், இம்ரான் கான், சர்பராஸ் நவாஸ், ரிச்சர்ட் ஹாட்லி என்று எந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினாலும் ஹெல்மெட் அணியாமல் எதிர்கொண்டார்.
மாறாக ரோஹித் சர்மா உள்ளிட்ட நவீன வீரர்கள் அனைவரும் ஹெல்மெட்டில் கூடுதல் பாதுகாப்பு, மார்புக் கவசம், கைக்கவசம், முதுகுக் கவசம் என்று ஏகப்பட்ட கவசங்களுடன் இறங்கி ஆடுகின்றனர். எப்படி ஒப்பிட முடியும். ரிச்சர்ட்ஸை விடுவோம், நம் இந்திய அணியின் முன்னாள் இரும்பு மனிதன் மொஹீந்தர் அமர்நாத்துடன் கூட புல், ஹூக் ஷாட்களில் ரோஹித்தை ஒப்பிட முடியாது என்பதுதான் உண்மை.