எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த ஐபிஎல் ஆணையம் தீவிரம்: மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பிசிசிஐ | iPL Commission keen to hold remaining matches BCCI awaiting central government decision
மும்பை: எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவதற்கு ஐபிஎல் ஆணையம் தீவிரமாக உள்ளது. போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு முடிவுக்காக தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) காத்திருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்திய வீரர்கள் தங்களது நகரங்களுக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை இந்தியா,பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. இதனால் எல்லைப் பகுதியில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 18 போட்டிகளை நடத்துவதற்கு ஐபிஎல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக பிசிசிஐ தற்போது காத்திருக்கிறது.
அநேகமாக வரும் 15 அல்லது 16-ம் தேதி போட்டிகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது. ஒரே நாளில் இரண்டு, இரண்டு ஆட்டங்களாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மே 30-ம் தேதி இறுதிப் போட்டியை நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா கூறும்போது, “ஒரு வாரத்துக்கு போட்டிகளை நாங்கள் தள்ளிவைத்தோம். அந்தக் காலக்கெடு முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் உள்ளன.
போர்ப்பதற்றம் தொடர்பாக தற்போது நடந்து வரும் சூழ்நிலையை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதையடுத்து ஐபிஎல் பங்குதாரர்கள், அணி நிர்வாகங்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போட்டியை மீண்டும் தொடங்குவது தொடர்பாக அறிவிக்கப்படும். ஒரே நாளில் 2 ஆட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும். விரைவில் போட்டி தொடங்கவுள்ள தேதியை பிசிசிஐ அறிவிக்கும்” என்றார்.