EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கம் | india won 7 medals in archery world cup stage 2 shanghai


ஷாங்காய்: உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டியில் இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ரீகர்வ் பிரிவு சுற்றில் தென் கொரிய வீராங்கனையும், 4 முறை ஒலிம்பிக் சாம்பியனுமான லிம் சிஹியோனும், இந்தியாவின் தீபிகா குமாரியும் மோதினர். இதில் லிம் 7-1 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வென்றார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரியும், தென் கொரியாவின் காங் சே யங்கும் மோதினர். இதில் தீபிகா 7-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஆடவர் பிரிவில் இந்திய வீரர் பார்த் சாலுங்கே அரை இறுதியில் 1-7 என்ற கணக்கில் கொரிய வீரர் கிம் வூஜின்னிடம் தோல்வி கண்டார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் சாலுங்கே 6-4 என்ற கணக்கில் பிரான்ஸின் பாப்டிஸ்ட் அட்டிஸை சாய்த்தார். இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா 5 பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.