மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது? – பிசிசிஐ விரைவில் முடிவு | India Pakistan ceasefire When IPL 2025 season will resume
சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று இரவு போர் நிறுத்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இன்று காலை முதல் எந்தவித தாக்குதலும் எல்லையோர பகுதிகளில் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது எப்போது என்பதை பார்ப்போம்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் காரணமாக ஒரு வார காலம் ‘ஐபிஎல் 2025’ சீசன் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழல் காரணமாக மீண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தரப்பில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதை இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.
இந்நிலையில், மீண்டும் ஐபிஎல் சீசனை தொடங்குவது குறித்த அறிவிப்பை விரைவில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வரும் 12-ம் தேதி இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு நடப்பு ஐபிஎல் சீசனின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களை நாள் ஒன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் என நடத்தி முடிக்கவும், நடப்பு சீசனை இந்த மாதத்துக்குள் முடிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல். இருப்பினும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரும் சவாலும் இதில் அடங்கியுள்ளது.
முன்னதாக, இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களை தேசத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. போர் நிறுத்தம் காரணமாக மீண்டும் நாடு முழுவதும் உள்ள மைதானங்களில் ஐபிஎல் சீசனை வழக்கம் போலவே நடத்தலாம் என்ற திட்டமும் இருப்பதாக தகவல். எப்படியும் இது குறித்த அப்டேட் அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.