ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் புறப்பட்டனர் | Foreign players who participated in IPL 2025 season back to home
மும்பை: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் பஞ்சாப், டெல்லி கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் போட்டி ஒளிபரப்பு குழுவினர் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் மூலம் தரம்சாலாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்திய வீரர்கள் தங்களது நகரங்களுக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஜோஷ் ஹேசில்வுட், ரொமாரியோ ஷெப்பர்டு, லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், டிம் டேவிட், நூவன் துஷாரா, லுங்கி நிகிடி ஆகிய 8 வெளிநாட்டு வீரர்கள் நேற்று பெங்களூருவில் இருந்து தங்களது நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இதேபோன்று லக்னோ, மும்பை, கொல்கத்தா அணிகளில் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களும் தாயகம் புறப்பட்டு சென்றுள்ளனர். இதை அந்த அணிகள் உறுதி செய்துள்ளன. போட்டியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் சென்றிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் கொல்கத்தாவுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களை கருதி ஐபிஎல் தொடரின் எஞ்சிய 16 ஆட்டங்களை பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கையை பிசிசிஐ முன்னெடுத்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லை பகுதியிலும் அமைதி திரும்பி வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பிசிசிஐ விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் அட்டவணையின் படி மே 25-ம் தேதிக்குள் தொடர் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இந்த வகையில் அடுத்த 5 முதல் 6 நாட்களுக்குள் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.