12 டெஸ்ட் சதங்கள்… அனைத்தும் வெற்றிச் சதங்கள்! – ரோஹித் சர்மாவின் வியத்தகு சாதனைகள் | 12 Test centuries… all winning centuries – Rohit Sharma amazing achievements
ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து மனது வந்து ரிட்டையர் ஆவதாக அறிவித்து விட்டார். ஆனால் அவரது டெஸ்ட் கரியர் மிகவும் தாமதமாகத் தொடங்கியது. சேவாக் இடத்தை இட்டு நிரப்ப வேண்டும் என்று அவரை டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறக்கி விட்டனர். ஆனால், அவர் பல வேளைகளில் தன்னை சுனில் கவாஸ்கர் என்று நினைத்துக் கொண்டுதான் ஆடினார். சேவாகின் ஹேண்ட் -ஐ- ஒருங்கிணைப்பு, அந்த ரிப்ளெக்ஸ் இவருக்குக் கிடையாது, மேலும் இவர் மந்தமான நகர்வுடைய வீரர் என்பதும் நாம் பார்த்ததே. ஆனால், சில டெஸ்ட் புள்ளி விவரங்கள் ஆச்சரியளிப்பதாக உள்ளன:
ரோஹித் சர்மா 12 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இந்த 12 டெஸ்ட் சதங்களும் இந்திய அணியின் வெற்றியில் முடிந்துள்ளது என்பது ஒப்புயர்வான சாதனை. இதன் அருகில் கூட சிறந்த பேட்டர்கள் யாரும் இல்லை என்பதுதான் ஆச்சரியம். வார்விக் ஆர்ம்ஸ்ட்ராங் 6 சதங்கள் வெற்றியில் முடிந்துள்ளது. டேரன் லீமேன் 5 சதங்கள் டெஸ்ட் வெற்றியில் முடிந்துள்ளது.
12 சதங்களில் 9 சதங்கள் தொடக்க வீரராகக் களமிறங்கிய போது ரோஹித் சர்மா எடுத்தது. அக்டோபர் 2019-ல் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அதிலிருந்து இப்போது வரை 4 தொடக்க வீரர்கள்தான் 9 சதங்களை எடுத்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3 சுற்றுக்களிலும் சேர்த்து ரோஹித் சர்மா 2,716 ரன்கள் எடுத்து அதிக ரன்களுக்கான இந்தியச் சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 9 சதங்கள் என்பதும் மற்ற இந்திய வீரர் ஒருவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதிக்காதது. விராட் கோலி 5 சதங்கள், ஷுப்மன் கில் 5 சதங்கள். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரோஹித்தின் சராசரி 41.15 என்றால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சராசரி 52.88.
2019-20 சீசன் தொடக்கம் முதல் 2023-24 சீசன் வரை டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 50.03. குறைந்தது 25 இன்னிங்ஸ்களை இதே காலக்கட்டத்தில் ஆடிய வகையில் மற்ற 8 பேட்டர்கள் மட்டுமே 50 சராசரியை எட்டியுள்ளனர்.
அதேபோல் அரைசதத்தை சதமாக மாற்றும் கன்வர்ஷன் ரேட்டும் ரோஹித்துக்கு அதிகம் 16 முறை 50+ ஸ்கோரை எடுத்த ரோஹித் அதில் 9-ஐ சதங்களாக மாற்றியுள்ளார். ஷிகர் தவான் 12-இல் 7-ஐ சதங்களாக மாற்றியுள்ளார்.
ஆனால், 12 சதங்களில் 10 சதங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டதே. ஆகவே, இவரது வீரதீரமெல்லாம் இங்குதான், வீட்டில் புலி வெளியில் எலி. இந்தியா சாதனையான 18 உள்நாட்டுத் தொடர்களை தொடர்ச்சியாக வென்றதில் எடுக்கப்பட்டதே இந்த 12 சதங்கள்.
இதே காலக்கட்டத்தில் 18 ஹோம் தொடர் வெற்றிகளில் விராட் கோலி 12 சதங்களை 2,444 ரன்களுடன் எடுத்துள்ளார்.
2019-ல் விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 13 சிக்சர்களை விளாசியுள்ளார் ரோஹித். இது தனித்துவமான சாதனையே. டெஸ்ட்டில் ரொஹித் 88 சிக்சர்களை அடித்துள்ளார். ஒருவேளை தொடர்ந்து ஆடியிருந்தால் சேவாகின் 90 சிக்சர்கள் சாதனையை ரோஹித் முறியடித்திருக்கலாம்.
முதல் 2 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலேயே சதம் எடுத்த லாரன்ஸ் ரோவ், ஆல்வின் காளிச்சரண், கங்குலி, யாசிர் அகமது வரிசையில் ரோஹித்திற்கும் இடமுண்டு.
பிப்ரவரி 2021 முதல் ஜூலை 2023 வரை 30 தொடர்ச்சியான இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் ரோஹித் ஆட்டமிழந்ததே இல்லை. இது எந்த ஒரு பேட்டருக்கும் நிகழாத நீண்டதொரு பேட்டிங் சாதனை.