ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்க காரணம் இதுதான்… – கொளுத்திப் போடும் சேவாக் | This is the reason why Rohit Sharma announced his retirement – Sehwag
ரோஹித் சர்மா தன் 38-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தது குறித்து நிறைய உத்தேசக் காரணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இது வழக்கம்தான். ஏனெனில், ஓய்வு பெறுபவர் உண்மையான காரணங்களைத் தெரிவிக்காதபோது கலாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவானதுதானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் வருவதற்கு முன் பும்ரா கேப்டன்சியில் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பெரிய தோல்வியைப் பரிசாக அளிக்க, ரோஹித் வந்த பிறகோ பேட்டிங்க்கிலும் சொதப்பி கேப்டன்சியிலும் ஒன்றுமேயறியாத சிறுபிள்ளை போல் செய்து படுதோல்விக்குக் காரணமாக அமைந்தார்.
இதனையடுத்து, ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து மட்டுமல்ல, பிளேயராகவும் அணியிலிருந்து தூக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இந்நிலையில், இங்கிலாந்து தொடருக்கும் அவர்தான் கேப்டன், ‘அவரக் கண்டா வரச்சொல்லுங்க’ என்ற ரீதியில் மும்பை சார்பு ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென அவர் ஓய்வு அறிவித்ததற்குக் காரணம், கவுதம் கம்பீர், அஜித் அகர்கர், அவரை டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து தூக்குவதாக தெரிவிந்ததையடுத்து அணியில் தன் இடம் பற்றிய கேள்வி ரோஹித்துக்கே ஏற்பட்டிருக்கலாம்.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், ரோஹித்தின் ஓய்வு முடிவு குறித்து தன் கருத்தைத் தெரிவித்ததோடு இது நல்ல அறிகுறி என்றும் கூறிவிட்டார்.
“எனக்கு இது புதிராக உள்ளது. ஏனெனில், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரோஹித் தன்னை இப்படித் தயார் செய்து கொண்டிருக்கிறார், அப்படித் தயார் செய்து கொண்டிருக்கிறார் போன்ற செய்திகள் என் காதுகளையும் எட்டியது. ஆஸ்திரேலியா தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகிய போது என்ன கூறினார்? நான் எங்கும் போய் விடவில்லை, இங்குதான் இருக்கிறேன், நான் ஓய்வு பெறுவேன் என்று நினைக்க வேண்டாம் என்றார்.
ஆனால், இந்த முறை என்ன நடந்திருக்கலாம் என்றால், ‘ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து தூக்கப்போகிறோம்; அவரை வீரராகக் கூட அணியில் சேர்க்கப்போவதில்லை’ என்பதை தேர்வுக்குழுவினர் ரோஹித்திடம் பேசும்போது தெரிவித்திருப்பார்கள். இதுதான் நடந்திருக்க வேண்டும். ஆகவே, ரோஹித் நீங்கள் முடிவெடுங்கள் என்று கூறியிருப்பார்கள்.
அதனால்தான் அணித் தேர்வுக் குழுவினர் பொதுவெளியில் அறிவிக்கும் முன்னரே தானே ஓய்வு பெறுவதாக முடிவெடுத்தது போல் ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்து விட்டார். இது நல்ல அறிகுறி.” என்றார் சேவாக்.