வெற்றி நெருக்கடியில் டெல்லி கேப்பிடல்ஸ்: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | Delhi Capitals in crisis of victory: Clash with Punjab Kings today
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளை பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே டெல்லி அணியால் ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது டெல்லி அணி.
முதல் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளை குவித்த அந்த அணி அதன் பின்னர் விளையாடிய 5 ஆட்டங்களில் ஒரே வெற்றியை மட்டுமே பெற்றது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது. அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 29 ரன்களுக்கு 6 விக்கெட்களை தாரைவார்த்தது.
அஷுதோஷ் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 41 ரன்கள் சேர்த்ததால் சற்று கவுரவமாக ஸ்கோரை (133 ரன்கள்) சேர்த்தது டெல்லி அணி. ஆனால் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னர் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக டெல்லி அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட கருண் நாயர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தது நெருக்கடியை கொடுத்தது. டு பிளெஸ்ஸிஸ் (3), அபிஷேக் போரெல் (8) ஆகியோரும் விரைவில் வெளியேறினர். கே.எல்.ராகுல் (10), அக்சர் படேல் (6) ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர்.
இன்றைய போட்டி நடைபெறும் இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. கடந்த ஆட்டத்தில் இங்கு கூட்டாக 435 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி பெரிய அளவில் ரன்கள் குவிக்க முயற்சிக்கக்கூடும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். பேட்டிங்கில் 437 ரன்கள் குவித்துள்ள தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங், 405 ரன்கள் சேர்த்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், 347 ரன்கள் எடுத்துள்ள பிரியன்ஷ் ஆர்யா ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
பின்வரிசையில் நேஹல் வதேரா, ஷசாங் சிங் ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவர்கள். பந்துவீச்சை பொறுத்தவரையில் 16 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள அர்ஷ்தீப் சிங், 14 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள யுவேந்திர சாஹல் ஆகியோர் டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இவர்களுடன் மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.