டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு | rohit sharma to be removed as team india test cricket captain sources
மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். புதன்கிழமை (மே 7) ஓய்வு குறித்து ரோஹித் பகிர்ந்தார். அவர் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
38 வயதான ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 67 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 116 இன்னிங்ஸில் 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதம், 18 அரை சதம் பதிவு செய்துள்ளார். 91 சிக்ஸர்கள், 473 ஃபோர்களை விளாசி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 40.57. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, ரோஹித் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
“நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசத்துக்காக வெள்ளை சீருடையில் விளையாடியது மிகப் பெரிய கவுரவம். உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை விளையாடுவேன்” என இன்ஸ்டாகிராமில் ரோஹித் தெரிவித்துள்ளார்.
ரோஹித் தலைமையில் இந்திய அணி, 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 12 வெற்றி மற்றும் 9 தோல்விகளை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது அவரது தலைமையிலான இந்திய அணி. வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடருக்கான அணி அறிவிப்பதற்கு முன்னதாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அவரே ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ரன் சேர்க்க தடுமாறினார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.