EBM News Tamil
Leading News Portal in Tamil

“மூன்று நோ-பால்கள் பெரும் குற்றம்!” – ஹர்திக் பாண்டியா ஒப்புதல் | Three no-balls is a big crime – Hardik Pandya agrees


மும்பை, வான்கடேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற த்ரில் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி தோல்வி கண்டது. குறிப்பாக தீபக் சாஹர் கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் வீசிய நோ-பாலும், அதற்கு முன்பாக 8=வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய 2 நோபால்களும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவினால் தோல்விக்கான காரணமாக சுட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, களத்திலேயே கோபத்தைக் காட்டுபவராக தொடங்கி இப்போது சற்றே நிதானம் காட்டும் முதிர்ச்சி பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு அணியின் ஆட்டத்தை விமர்சிக்கத் தயங்க மாட்டார். ரோஹித் சர்மா போல் வழவழா கொழகொழா சாக்குப் போக்குகளெல்லாம் சொல்ல மாட்டார்.

தான் வீசிய 8-ஆவது ஓவரில் 2 நோபால்கள் வீசியதால் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் 14 ரன்களைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் முக்கியமான ஒரு மேட்ச் சூழ்நிலையில் தீபக் சாஹர் நோ-பால் ஒன்றை வீசினார். இதோடு திலக் வர்மா, ஷுப்மன் கில்லிற்கு (43) கேட்சை விட்டார், அப்போது கில் 35 ரன்களில் இருந்தார். ஆனால் ஹர்திக் கேட்ச் டிராப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார்.

“கேட்ச் டிராப் அவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் நோ-பால்கள், என்னுடைய 2 நோ-பால்களும் தீபக் சாஹரின் கடைசி ஓவர் நோ-பாலும் நிச்சயம் என் பார்வையில் பெரும் குற்றங்களே. இத்தகையக் குற்றங்கள் போட்டியையே தாரை வார்த்து விடும். அதுதான் நடந்தது. ஆனால் ஒன்று மட்டும் பெருமையளிக்கக் கூடியது வீரர்கள் கடைசி வரை விட்டுக் க்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடினர். 120% தங்களை அர்ப்பணித்தனர்.

நிச்சயம் பிட்ச் 150 ரன்களுக்கான பிட்ச் அல்ல. அதற்கு மேல் எடுத்திருக்க வேண்டிய பிட்ச்தான் 175 ரன்களை எடுத்திருக்க வேண்டும். எனவே பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்ததும் பெரிய காரணமாக நம் முன் நிற்கிறது. பவுலர்கள் நிச்சயம் நன்றாக வீசினர். சரியான பகுதிகளில் வீசினர். முதல் இன்னிங்ஸில் பந்து ஈரமாகவில்லை, ஆனால் 2ம் பாதியில் பந்து முழுதும் ஈரமானது. இதுவும் எங்களுக்குக் கடினமாக்கியது” என்றார்.

பவர் ப்ளேயில் பும்ரா பிரமாதமாக வீசினார், சாய் சுதர்ஷன் விரைவில் பெவிலியன் திரும்ப ஷுப்மன் கில் நிதானம் கடைப்பிடித்தார், பவர் ப்ளே ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் போல் அமைந்தது. அதாவது பந்துகள் ஸ்விங், பவுன்ஸ் ஆனது. அதனால் நார்மல் கிரிக்கெட்டை குஜராத் டைட்டன்ஸ் ஆடினர்.

பவர் ப்ளேயில் குஜராத் 29 ரன்களையே எடுத்தனர். பிறகு ஜாஸ் பட்லரும் ஷுப்மன் கில்லும் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் கடைசியில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது குஜராத். இதனால் மழை வந்தபோது டக்வொர்த் முறையில் மும்பை அணிதான் வெற்றி நிலையில் இருந்தது. ஆனால் கூட்சி, ராகுல் திவேத்தியா குஜராத்தை கரை சேர்த்தனர்.