பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு யாருக்கு? – மல்லுக்கட்டும் 7 அணிகள் | ipl 2025 play offs race 7 teams has chance
ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. இந்த அணிகளை தவிர மீதமுள்ள 7 அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 14 ஆட்டங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கவில்லை.
எனினும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்டர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கின்றன. இந்த 7 அணிகளும் பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு: விளையாடிய ஆட்டங்கள்: 11, புள்ளிகள்: 16, நிகர ரன் விகிதம்: 0.482, எஞ்சிய ஆட்டங்கள்: 3 (லக்னோ, ஹைதராபாத், கொல்கத்தா).
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் தற்போதைய நிலையில் 16 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடலாம்.
ஏனெனில் லக்னோ, கொல்கத்தா அணிகள் தங்களது எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் 18 புள்ளிகளை எட்ட முடியாது. அதேவேளையில் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களுடன் லீக் சுற்றை நிறைவு செய்ய வேண்டுமானால் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஏனெனில் பஞ்சாப், மும்பை, குஜராத் ஆகிய அணிகளும் 20 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் குவிக்க வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 11, புள்ளிகள்: 15, நிகர ரன் விகிதம் : 0.376, எஞ்சிய ஆட்டங்கள் : 3 (டெல்லி, மும்பை, ராஜஸ்தான்)
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பஞ்சாப் அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2 வெற்றி பெற்றாக வேண்டும். அதேவேளையில் 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் லீக் சுற்றை முதல் இரண்டு இடங்களுடன் நிறைவு செய்யும். ஆனால் அந்த அணி விளையாட உள்ள 3 ஆட்டங்களில் இரண்டு டாப் 5-ல் உள்ள அணிகளுக்கு எதிரானது.
மும்பை இந்தியன்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 11, புள்ளிகள்: 14, நிகர ரன் விகிதம் : 1.274, எஞ்சிய ஆட்டங்கள்: 3 (குஜராத், பஞ்சாப், டெல்லி)
மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை (குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டம் நீங்கலாக) குவித்து சிறந்த பார்மில் உள்ளது. இதில் 4 போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அல்லது 25 பந்துகளுக்கு மேல் மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணியின் நிகர ரன் விகிதத்தை (1.274) மற்ற அணிகளைவிட வலுவான நிலையில் வைத்துள்ளது.
மும்பை அணி எஞ்சியுள்ள ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றாலே எந்தவித சிக்கலுமின்றி பிளே ஆஃப் சுற்றில் கால்பதிப்பதை உறுதி செய்துவிடலாம். எனினும் 20 புள்ளிகளை எட்டும் பட்சத்தில் லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்யலாம். ஒருவேளை மும்பை அணி 16 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க நேரிடும். ஆனால் 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை உருவாகக்கூடும்.
குஜராத் டைட்டன்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 10 புள்ளிகள்: 14 நிகர ரன் விகிதம்: 0.867, எஞ்சிய ஆட்டங்கள்: 4 (மும்பை, டெல்லி, லக்னோ, சிஎஸ்கே)
குஜராத் டைட்டன்ஸ் அணி மற்ற அணிகளை கூடுதலாக ஒரு ஆட்டத்தை கையில் (மும்பை அணிக்கு எதிராக நேற்று மோதிய ஆட்டம் உட்பட) வைத்துள்ளது. மேலும் மும்பை அணிக்கு அடுத்த படியாக சிறந்த நிகர ரன் விகிதத்தை (0.867) பெற்றுள்ளது. மேற்கொண்டு 2 வெற்றிகளை வசப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றில் நுழைவது உறுதியாகிவிடும்.
அதேவேளையில் குஜராத் அணி தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து மூட்டை கட்ட வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணி தனது கடைசி 2 ஆட்டங்களை சொந்த மைதானத்தில் விளையாட உள்ளது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 11 புள்ளிகள்: 13, நிகர ரன் விகிதம்: 0.362, எஞ்சிய ஆட்டங்கள்: 3 (பஞ்சாப், குஜராத், மும்பை)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாக ரத்தானதால் அதிர்ஷ்டவசமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. இது அந்த அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் அடைந்த தோல்விகளுக்கு ஆறுதல் அளிக்கக்கூடும். பிளே ஆஃ சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உருவாகி உள்ளது. ஏனெனில் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தால் 17 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்யும். இந்த புள்ளிகளை 6 அணிகள் எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்லி அணி ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 11 புள்ளிகள்: 11 நிகர ரன் விகிதம்: 0.249, எஞ்சிய ஆட்டங்கள்: 3 (சிஎஸ்கே, ஹைதராபாத், பெங்களூரு)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நிகர ரன் விகிதம் ஆகியவற்றை பொறுத்தே கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது தெரிய வரும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: விளையாடிய ஆட்டங்கள்: 10 புள்ளிகள்: 10 நிகர ரன் விகிதம்: -0.469, எஞ்சிய ஆட்டங்கள்: 3 (பெங்களூரு, குஜராத், ஹைதராபாத்)
டெல்லி அணியை போன்றே லக்னோ அணியும் தடுமாறி வருகிறது. கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் லக்னோ அணி தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது சிக்கலாகி உள்ளது. அந்த அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகளையே பெற முடியும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே லக்னோ அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரிய வரும். அதேவேளையில் லக்னோ அணி மேற்கொண்டு ஒரு தோல்வியை சந்தித்தாலும் தொடரில் இருந்து வெளியேறும். ஏனெனில் அந்த அணியின் நிகர ரன் விகிதம் -0.469 ஆக இருக்கிறது.