கட்டாய வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் கொல்கத்தா: சிஎஸ்கேவுடன் இன்று பலப்பரீட்சை | kkr in must win situation to play against CSK today match preview ipl 2025
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் கொல்கத்தா அணி உள்ளது.
இந்த 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் 17 புள்ளிகளையே பெறும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நிகர ரன் விகிதம் ஆகியவற்றை பொறுத்தே கொல்கத்தா அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும். சிஎஸ்கேவுக்கு எதிராக இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் விளையாடும் கொல்கத்தா அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களையும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடுகிறது.
கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 57 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருந்தார். சரியான நேரத்தில் அவர் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். ரூ.23.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். டாப் ஆர்டரில் ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரேன், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் சிறந்த அடித்தளம் அமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தக்கூடும். நடுவரிசையில் ரகுவன்ஷி, சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில், 94 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 45 பந்துகளில், 77 ரன்களையும் விளாசியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். மற்றொரு இளம் தொடக்க வீரரான ஷேக் ரஷித் கடந்த சில ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக அறிமுக வீரராக உர்வில் படேல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்து தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு கேப்டனாக தோனி பொறுப்பேற்றிருந்தார். ஏனெனில் இந்த ஆட்டத்தில் 8 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்த தோனி, யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஆட்டமிழந்திருந்தார். ஈடன் கார்டன் மைதானம் தோனிக்கு பல்வேறு பசுமையான தருணங்களை கொடுத்துள்ளது.
தனது முதல் தர சதத்தை தோனி இந்த மைதானத்தில்தான் விளாசியிருந்தார். மேலும் அவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த 6 சதங்களில், 2 சதங்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்டவைதான். தோனி இங்கு கிளப் கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார், இதில் ஷம்பசார் கிளப்பிற்காக பி.சென் டிராபி இறுதிப் போட்டியில் மறக்கமுடியாத வகையிலான செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.