இந்திய அணி, ஆர்சிபி கேப்டன்சியை துறந்தது குறித்து கோலி ஓபன் டாக்! | Kohli opens up about stepping down as captain of team India and RCB
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணி உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கோலி இதை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகினார். அதே ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். பின்னர் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கோலி விலகினார்.
“இந்திய அணியின் கேப்டனாக 7 முதல் 8 ஆண்டுகள் இருந்துள்ளேன். ஆர்சிபி அணிக்கு 9 ஆண்டுகள் கேப்டனாக தாங்கி உள்ளேன். ஒரு பேட்ஸ்மேனாக ஒவ்வொரு ஆட்டத்திலும் என் மீது எதிர்பார்ப்பு இருக்கும். எந்தவொரு ஆட்டத்திலும் அது இல்லாமல் இருந்ததில்லை. கேப்டன்சி இல்லை என்றால், பேட்டிங்கில் அது இருக்கும். இப்படி 24×7 என அதை நான் எதிர்கொண்டேன். அது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது.
அந்த இடத்தில் நான் இருக்க வேண்டுமென முடிவு செய்தால், நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எந்தவிதமான ஜட்ஜ்மென்டும் இல்லாமல் கிரிக்கெட் விளையாட விரும்பினேன். ஸ்பாட்லைட்டில் இருக்கும் போது நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அறிந்தேன். நான் எனது ஆட்டத்தில் மிகவும் ரியாலிஸ்டிக்காக இருந்தேன்.
எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் தொடக்கத்தில் தோனி மற்றும் கேரி க்ரிஸ்டன் ஆகியோர் எனது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு கூறினார்கள்” என விராட் கோலி கூறியுள்ளார். இப்போது சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என கோலி ஆடுகின்ற ஒவ்வொரு ஆட்டமும் மைல்கல் சாதனைகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.