EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரப்சிம்ரன் ஷாட்கள் கண்களுக்கு விருந்து: பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு | Prabhsimran shots are feast for eyes Punjab kings captain Shreyas Iyer ipl 2025


தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் 25 பந்துகளில், 54 ரன்களும் ஜோஷ் இங்லிஷ் 14 பந்துகளில், 30 ரன்களும் ஷசாங் சிங் 15 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். லக்னோ அணி சார்பில் திக்வேஷ் ராத்தி, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

237 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 74, அப்துல் சமத் 45 ரன்கள் சேர்த்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். பஞ்சாப் அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “வெற்றிபெற்றது மகிழச்சி அளிக்கிறது. எல்லோரும் சரியான நேரத்தில் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அனைவரிடமிருந்தும் வெளிப்பட்ட பங்களிப்பு மகத்தானது. பிரப்சிம்ரன் விளையாடிய விதம் அபாரமானது. அவரது ஷாட்கள் கண்களுக்காக விருந்தாக அமைந்தது.

இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது இல்லை. ஆனால் அது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் போட்டியை வெல்வதற்காகவே மைதானத்தில் காலடியெடுத்து வைக்கிறேன். இதுதான் எனது மனநிலை. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவே அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு நபரும் தங்கள் பணியை துல்லியமாக அறிந்திருக்கிறார்கள், அதை,அவர்கள் செயல்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

நாம் சரிசெய்ய வேண்டிய ஒரே விஷயம் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை அறிந்து அதற்கு தகுந்தபடி நகர்ந்து செல்வதுதான். உங்களை நீங்களே ஆதரித்து, உள்ளுணர்வின்படி செயல்பட வேண்டும். புள்ளிவிவரங்கள் மற்றும் அது என்ன வழங்க முடியும் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்காதீர்கள். முடிவுகள் முக்கியம், அதுதான் வெற்றி” என்றார்.