EBM News Tamil
Leading News Portal in Tamil

ஒருநாள் போட்டி, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்! | team India tops ODI and T20 cricket icc rankings


துபாய்: ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்திய அணி மதிப்பீட்டு புள்ளிகளை 122 முதல் 124 ஆக உயர்த்தியுள்ளது.

நியூஸிலாந்து (109), ஆஸ்திரேலியா (109), இலங்கை (104), பாகிஸ்தான் (104), தென் ஆப்பிரிக்கா (96), ஆப்கானிஸ்தான் (91), இங்கிலாந்து (84), மேற்கு இந்தியத் தீவுகள் (83), வங்கதேசம் (76) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

டி 20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. முதல் முறையாக வருடாந்திர டி 20 தரவரிசையில் உலகில் உள்ள 100 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 8 ஆட்டங்கள் விளையாடி அணிகள் தரவரிசை பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து (113), தென் ஆப்பிரிக்கா (111), இந்தியா (105), நியூஸிலாந்து (95), இலங்கை (87), பாகிஸ்தான் (78), மேற்கு இந்தியத் தீவுகள் (73), வங்கதேசம் (62), அயர்லாந்து (30) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன.