‘எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன்’ – மனம் திறக்கிறார் பும்ரா | I not afraid to bowl to any batsman says Bumrah ipl 2025
மும்பை: எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா கூறியுள்ளார்.
உலகில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஜஸ்பிரீத் பும்ரா. டி20 போட்டிகளின் கடைசி ஓவர்களில் மிகச்சிறந்த முறையில் பந்துவீசி எந்தவொரு பேட்ஸ்மேனையும் திணறடிக்கும் அசாத்திய திறமை பெற்றவர் பும்ரா. கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார் பும்ரா. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் அவர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது: ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாக விளையாடுவது போன்றுதான் நான் அணுகுவேன். இதுவரை எந்தவொரு பேட்ஸ்மேனையும் கண்டு பயந்ததில்லை. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவோ அல்லது சராசரியான மட்டை வீச்சாளராகவோ இருக்கலாம். உண்மையில் எந்த வீரரையும் கண்டு பயந்ததில்லை என்பதுதான் உண்மை. கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் மதிக்கிறேன். அதேபோல் விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் நான் மதிப்பு கொடுக்கிறேன்.
ஆனால், நான் அவரைப் பார்த்து பயப்படுகிறேன் என்றோ, அவர் என்னை விட சிறந்தவர் என்றோ அந்த பேட்ஸ்மேனுக்கு மன உறுதியைக் கொடுத்துவிட்டால், விளையாட்டில் நான் தோல்வி கண்டுவிட்டேன் என்று அர்த்தம். எனவே, மன உறுதியை விட்டுத்தரமாட்டேன்.
போட்டியின்போது எனக்கு அது மோசமான நாளாக இருந்தாலும் சரி.. ஒருவேளை என்னுடைய பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவித்திருந்தாலும் சரி. அதுகுறித்து நான் கவலை கொள்ளமாட்டேன். என்னை யாரும் வெல்ல முடியாது என்று மனதளவில் என்னை திடப்படுத்திக் கொள்வேன். இதைத்தான் இதுநாள் வரை கிரிக்கெட்டிலிருந்து நான் கற்றுக்கொண்டேன். அதன்படி நடந்து வருகிறேன்.
கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் அது உங்கள் நாளாக அமையப்போவதில்லை. அனைத்தையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், உங்களுடைய வேலையை நீங்கள் சரியாகச் செய்யவேண்டும். உங்களை முழுதாக நம்ப வேண்டும். அப்போதுதான் உங்களால் சிறந்த செயல்திறனை விளையாட்டில் தர முடியும்.
நடப்பு சீசனில் எங்கள் மும்பை அணி மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. ஓர் அணியாக நாங்கள் மெதுவாக வெற்றிகளைப் பெற ஆரம்பித்தோம். சரியான நேரத்தில் உச்சத்துக்கு வந்துவிட்டோம். எங்கள் அணி தனி நபரை மட்டும் நம்பியிருக்காமல் வெற்றிகளைக் குவித்து வருவது நல்ல அறிகுறியாகத் தென்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.