ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் கொல்கத்தா | kkr in must win situation to play Rajasthan Royals today match preview ipl 2025
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன், 9 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது கொல்கத்தா அணி.
அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கூட்டாக 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தனர். இந்த சுழல் கூட்டணி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரிக்கக்கூடும்.
இன்றைய ஆட்டம் உட்பட கொல்கத்தா அணிக்கு 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தொடர்ந்து ஈடன் கார்டனில் வரும் 7-ம் தேதி சிஎஸ்கேவை சந்திக்கிறது கொல்கத்தா அணி. இதன் பின்னர் ஹைதராபாத் சென்று 10-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தொடர்ந்து பெங்களூருவில் 17-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் எதிர்கொள்கிறது.
இதில் பெங்களூரு அணியைதவிர மற்ற 3 அணிகளும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. எனினும் அந்த அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணிகளிடம் இதற்கு மேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் எந்தவித அழுத்தமும் இன்றி விளையாடும். ஆனால் கொல்கத்தா அணியோ வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி வெற்றி 4 ஆட்டங்களிலும் பெற்றால் மட்டுமே 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் முன்னேற முடியும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே தெரியவரும்.
அந்த அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் மோசமாக விளையாடி வருகிறது. இங்கு விளையாடி உள்ள 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது.
டாப் ஆர்டர் பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் ரஹ்மனுல்லா குர்பாஸ், சுனில் நரேன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அஜிங்க்ய ரஹானே, அங்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட ரிங்கு சிங் இம்முறை 8 ஆட்டங்களில் 169 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
அதேவேளையில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 10 ஆட்டங்களில் 142 ரன்களே எடுத்துள்ளார். பின்வரிசையில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடிய ஆந்த்ரே ரஸ்ஸல் 72 ரன்களே சேர்த்துள்ளார். இவர்கள் 3 பேரும் பொறுப்பை உணர்ந்து மட்டையை சுழற்றினால் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறியலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ஆட்டங்களில் 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. கடைசி 7 ஆட்டங்களில் அந்த அணி ஒரே வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் வெற்றியை தேடிதரக்கூடிய வீரர்கள் இல்லாதது அணியை ஒட்டுமொத்தமாக பலவீனமாக்கி உள்ளது.
சஞ்சு சாம்சனின் காயம், மிடில் ஆர்டரில் ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல், நிதிஷ் ராணா ஆகியோரது மோசமான பார்ம் ஆகியவற்றால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசிய நிலையில் மும்பை அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்டத்தில் அவரும், மற்றொரு தொடக்க வீரரான யஷய்வி ஜெய்ஸ்வாலும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.