போதை மருந்து பயன்படுத்தியதால் இடை நீக்கத்தில் இருக்கிறேன்: ரபாடா அதிர்ச்சி தகவல் | I am suspended for using drugs Rabada reveals ipl 2025
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் போதை மருந்து பயன்படுத்தியதற்காக தடையை பெற்றுள்ளேன் என ரபாடா தெரிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடையவைத்துள்ளார். 30 வயதை நெங்கும் ரபாடா, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்கா திரும்பினேன். நான் தாயகம் திரும்பியதற்கு மனமகிழ் மருந்து (recreational drug) பயன்படுத்தியது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதே காரணம்.
நான் தற்காலிக இடைநீக்கத்தை அனுபவித்து வருகிறேன், நான் விளையாட விரும்பும் விளையாட்டிற்கு திரும்புவதை எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர் பயன்படுத்திய மருந்து என்னவென்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்த சோதனை போட்டியின் போது எடுக்கப்பட்டதா அல்லது போட்டிக்கு வெளியே எடுக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.