EBM News Tamil
Leading News Portal in Tamil

நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஏன்? – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம் | Why argued with the umpires Gujarat captain Shubman Gill explains


அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசிய நிலையில் 13-வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷால் படேல், ஹென்ரிச் கிளாசன் கூட்டணியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இந்த ரன் அவுட் சர்ச்சைக்குரிய முறையில் இருந்தது. ஏனெனில் ஸ்டெம்புகளுக்கு முன்பு இருந்து பந்தை பிடித்த கிளாசன் பந்தை ஸ்டெம்புகளை நோக்கி தள்ளினார். அப்போது பந்து விலகிய நிலையில் கிளாசனின் கையுறை ஸ்டெம்பில் பட்டு பெய்ல்ஸ் விழுந்தது. 3-வது நடுவர் பலமுறை இந்த காட்சிகளை ரீப்ளேவில் பார்த்துவிட்டு அவுட் கொடுத்தார்.

இதனால் விரக்தியுடன் களத்தில் இருந்து வெளியேறிய ஷுப்மன் எல்லைக்கோட்டுக்கு வெளியே நின்ற 4-வது நடுவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைடுத்து குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் விரைந்து வந்து ஷுப்மன் கில்லை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

இதன் பின்னர் ஹைதராபாத் அணி இலக்கை துரத்திய நிலையில் 14-வது ஓவரை வீசிய பிரசித் கிருண்ஷா 4-வது பந்தை யார்க்ராக வீச அது அபிஷேக் சர்மாவின் ஷுவை தாக்கியது. இதனால் குஜராத் அணியினர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்டனர். ஆனால் களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து குஜராத் அணி மேல்முறையீடு செய்தது. இதில் பந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருந்ததாக கூறி களநடுவரின் முடிவு தொடரும் என அறிவித்தார். இதனால் கோபம் அடைந்த ஷுப்மன் கில் களநடுவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார். நடுவர்கள் அதை ஷுப்மன் கில்லுக்கு விளக்க முயன்றனர், ஆனால் அவர் அதை நம்பவில்லை. இறுதியில், அபிஷேக் சர்மா ஷுப்மன் கில்லை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒரே போட்டியில் ஷுப்மன் கில் இருமுறை நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதப்பொருளாக மாறியது. இது குறித்து போட்டிக்குப் பின்னர் ஷுப்மன் கில் கூறும்போது, “எனக்கும் நடுவர்களுக்கும் சில உரையாடல்கள் இருந்தன. சில நேரங்களில் நீங்கள் 110 சதவிகித உழைப்பினைக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் மிகுதியால் இப்படி நடக்கும்” என்றார்.