EBM News Tamil
Leading News Portal in Tamil

ஸ்ரீசாந்த் 3 ஆண்டுகள் சஸ்பெண்ட் – கேரளா கிரிக்கெட் சங்கம் அதிரடி | Sreesanth suspended for 3 years – Kerala Cricket Association takes action


சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததற்காக கேரளா கிரிக்கெட் சங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து, ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம்.

கேரளா கிரிக்கெட் லீகின் ஏரீஸ் கொல்லம் செய்லர்ஸ் அணியின் சக உரிமையாளராகவும் ஸ்ரீசாந்த் இருப்பதால், அந்த அணி உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கேரளா கிரிக்கெட் சங்கம். அதாவது, சஞ்சு சாம்சன் விவகாரத்தில், “அடிப்படை ஆதாரமற்ற, கேரள கிரிக்கெட் சங்கத்தின் நேர்மைக்குக் களங்கம் ஏற்படும் விதமாக ஸ்ரீசாந்த் பேசியதால் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக” கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கேரளா கிரிக்கெட் சங்கம் குறித்து அவதூறாகப் பேசிய சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் மற்றும் அவரது கருத்துக்களை ஒளிபரப்பிய 24 நியூஸ் சேனலின் ஆங்கர் ரெஜி லூகோஸ் ஆகியோருக்கும் கேரளா கிரிக்கெட் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் ஹசாரே டிராபியில் தன் மகன் சஞ்சுவை கேரளா அணியில் எடுக்காததற்குக் காரணம் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையே என்று கேரளா கிரிக்கெட் சங்கம் கூற, சஞ்சுவின் தந்தை அதைக் கடுமையாக மறுத்து ‘என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை கேரளா கிரிக்கெட் சங்கம் முடிக்கப் பார்க்கிறது. ராகுல் திராவிட் என் மகனுக்கு ஆதரவாக இருந்தார், கம்பீர், சூரியகுமார் யாதவ்வும் என் மகனுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் கேரளா கிரிக்கெட் சங்கம் என் மகனின் வாழ்க்கையை முடிக்கப் பார்க்கிறது, சதி செய்கிறது, சூழ்ச்சி செய்கிறது’ என்றெல்லாம் கடுமையாகச் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு அளித்ததற்காக ஸ்ரீசாந்த் மீது நடவடிக்கை இல்லை. கேரளா கிரிக்கெட் லீக் அணி ஒன்றின் உரிமையாளராக அவரது பேச்சு அவதூறாகவும் ஒப்பந்தத்தை மீறுவதாகவும் இருந்ததனால்தான் என்று கேரள கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. சஞ்சுவின் தந்தை சாம்சன் விஸ்வநாத்திற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரப்போவதாகவும் கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்ரீசாந்தின் குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்த கேரளா கிரிக்கெட் சங்கம், ஒருபோதும் வீரர்களைக் கைவிட்டதில்லை என்றும், ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் சிறை சென்றபோது அவருக்கும் முழு ஆதரவு அளித்தோம் என்றும், அவர் சிறை சென்ற விவகாரத்தை இப்போது இழுத்துக் குத்தலாகப் பேசியுள்ளது. மேலும், ஸ்ரீசாந்த் கிரிமினல் வழக்கிலிருந்துதான் விடுவிக்கப்பட்டாரே தவிர, மேட்ச் பிக்சிங்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை, எனவே இவர் சஞ்சுவுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமில்லை என்றும் சாடியுள்ளது.

ஸ்ரீசாந்த் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, கேரளா கிரிக்கெட் சங்கம் சஞ்சுவுக்குப் பிறகு சர்வதேச அளவுக்கான வீரர் ஒருவரைக்கூட உருவாக்கவில்லை, சஞ்சு மட்டும்தான் இருக்கிறார் எனவே அவரை ஆதரிப்போம். கேரளா கிரிக்கெட் சங்கம் மற்ற மாநிலங்களிலிருந்து வீரர்களைத் தேர்வு செய்கிறது, இது மலையாள கிரிக்கெட் வீரர்கள் மீதான அவமரியாதையாகும் என்று மீண்டும் எதிர்த்தாக்குதல் தொடுத்துள்ளார்.