EBM News Tamil
Leading News Portal in Tamil

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனை சேர்க்க வேண்டும்: ரவி சாஸ்திரி | Sai Sudharsan should be in team India squad for England tour Ravi Shastri


மும்பை: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027-ம் ஆண்டு சுழற்சியில் இந்தியா தனது முதல் தொடரை இங்கிலாந்து அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கடந்த சுழற்சியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் உள்நாட்டில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு மீது இப்போதே எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேனான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனை தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:

சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக நான் பார்க்கிறேன். அவர், தரமான பேட்ஸ்மேனாக தெரிகிறார். இதனால் எனது பார்வை அவர் மீது இருக்கிறது. இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கும் சாய் சுதர்சன் இங்கிலாந்து சூழ்நிலைகளை அறிந்தவர். அவருடைய தொழில்நுட்பம், விளையாடும் விதம் ஆகியவற்றால் வெளியே இருந்து இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைய காத்திருக்கும் வீரர்களில் தேர்வு செய்யக்கூடிய முதல் நபராக இருப்பார் என கருதுகிறேன்.

ஸ்ரேயஸ் ஐயரும் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்குள் வர முடியும், ஆனால் இது மீண்டும் ஒரு போட்டியாக இருக்கும்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு நானாக இருந்தால் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளரை தேடுவேன். நல்ல ஃபார்மில் இருக்கும் வீரரை கண்டறிந்து அவரை பந்துவீச்சில் 6-வது விருப்ப தேர்வாக களமிறக்க முயற்சிப்பேன். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இது குறுகிய வடிவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராக கூட இருக்கலாம். அர்ஷ்தீப் சிங் போன்ற ஒருவர் ‘வெள்ளை பந்து ஸ்பெஷலிஸ்ட்’ என்று கூறும் விஷயம் எனக்கு பிடிக்கவில்லை.

அவரது சிவப்பு பந்து சாதனை மற்றும் அவர் வீசிய ஓவர்களின் எண்ணிக்கையையும் நான் உன்னிப்பாக கவனிப்பேன். அவரால் 15 முதல் 20 ஓவர்கள் வீச முடிந்தால், அணியின் சிறந்த கலவையாக இருப்பார். அதற்கான மனநிலை அவரிடம் உள்ளது. அர்ஷ்தீப் சிங் சிந்திக்கும் பந்துவீச்சாளர். இதேபோன்று கலீல் அகமதுவும் இருக்கிறார். அவரது ரிதம் நன்றாக உள்ளது. இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 50.40 சராசரியுடன் 5 அரை சதங்கள் விளாசி 504 ரன்கள் வேட்டையாடி உள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 154.12 ஆக உள்ளது.