EBM News Tamil
Leading News Portal in Tamil

28 பந்துகளில் சதம் விளாசி அசத்திய உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அழைப்பு | csk calls Urvil Patel who scored a century off 28 balls ipl 2025


சென்னை: 5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்கும் பணியில் சிஎஸ்கே இப்போதே கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஏற்கெனவே இளம் வீரர்களான மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே, தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் 28 பந்துகளில் சதம் விளாசிய அசத்தியிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் உள்ளிட்ட 3 இளம் வீரர்களை தேர்வுக்காக சிஎஸ்கே அணி அழைத்து அவர்களது திறனை பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலுடன் மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் அமன் கான், கேரளாவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் சல்மான் நிசார் ஆகியோரும் சிஎஸ்கேவின் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த தேர்வு கடந்த ஏப்ரல் 27 மற்றும் 28-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

சிஎஸ்கேவின் பரிசோதனையில் உர்வில் படேல் 20 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களையும், பின்னர் 2-வது வாய்ப்பில் 20 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் அரை சதமும் அடித்ததாக தெரிகிறது. அவரது பேட்டிங்கை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. உர்வில் படேல் இதற்கு முன்னர் சிஎஸ்கே நடத்திய தேர்வில் பங்கேற்றுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே தேர்வாகி உள்ளார்.

உர்வில் படேல் 2024-25-ம் ஆண்டு சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி நிலையில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் 28 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். அந்த சீசனில் உர்வில் படேல் 6 ஆட்டங்களில் 315 ரன்களை குவித்திருந்தார். ஸ்டிரைக் ரேட் 229.92 ஆக இருந்தது. எனினும் அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது.

26 வயதான உர்வில் படேலை கடந்த 2023-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அவரது அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது. ஆனால் அவருக்கு அந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து 2024-ம் ஆண்டு சீசனில் அவரை குஜராத் அணி விடுவித்திருந்தது.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அமன் கான், இதற்கு முன்னர் ஐபிஎல் தொடர்கள்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளில் இடம் பெற்றுள்ளார். சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கேவின் தேர்வின் போது, அமன் கான் 2 சிக்ஸர்களை அடித்து தனது பவர் ஹிட்டிங் திறனை நிரூபித்துள்ளார்.

சல்மான் நிசார் இன்னும் உள்ளூர் டி 20 தொடர்களில் அறிமுகமாகவில்லை. எனினும் கேரள அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த சீசனில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். கேரள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் சல்மான் நிசார் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.