கோலியின் பிளே லிஸ்ட்டில் சிம்புவின் ‘நீ சிங்கம் தான்’ பாடல்! | virat kohli listens to nee singam dhan song right now silambarasan str film
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தற்போது தான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் என்ன என்பது குறித்து ஆர்சிபி அணியின் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. அது இப்போது கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், அது தமிழ் திரைப்பட பாடல்.
அந்த வீடியோவில் இப்போது எனது ஃபேவரைட் பாடல் என்ன என்பதை அறிந்து ‘நீங்கள் ஷாக் ஆவீர்கள்’ என விராட் கோலி சொல்கிறார். தொடர்ந்து ‘நீ சிங்கம் தான்’ என சொல்லி, தனது போனில் உள்ள ஆடியோ ஆல்பத்தை கேமரா கண்களுக்கு காட்டி இருந்தார்.
தற்போது கோலி விரும்பி கேட்கும் பாடல் ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ சிங்கம் தான்’ பாடல். சிலம்பரசன் நடிப்பில் கடந்த 2023-ல் இந்த படம் வெளியானது. இதை ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.
இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்றுதான் ‘நீ சிங்கம் தான்’ பாடல். சுமார் 4.07 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த பாடலை பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். பாடல் வரிகளை விவேக் எழுதி இருந்தார். இந்த பாடலில் வரிகள் மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும். சவாலை எதிர்கொள்ளும் ஒரு தனிநபரை போற்றும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் கோலியின் கவனத்துக்கு சென்றது எப்படி? கோலியின் தீவிர ரசிகர்கள் இந்த பாடலை கொண்டு அவருக்கென பிரத்யேக ரீல்களை உருவாக்கி இருக்கலாம். அதன் மூலம் அது கோலியின் கவனத்துக்கு சென்று இருக்கலாம். இதே போல கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட் செய்ய வரும் போது சேப்பாக்கத்தில் உள்ள டிஜே இந்த பாடலை ஒலிக்கச் செய்வது வழக்கம். அதன் மூலமாகவும் இந்தப் பாடல் கோலியின் கவனத்துக்கு சென்று இருக்கலாம் என தெரிகிறது.
கோலியின் ஃபேவரைட் பாடலாக தான் நடித்த படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளதை குறித்து சமூக வலைதளத்தில் டேக் செய்து, பகிர்ந்துள்ளார் நடிகர் சிம்பு. இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணாவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
Nee singam dhan @imVkohli https://t.co/qVwdmnLusi