EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஸ்ரேயஸ் அய்யரின் பெருமையும் கர்வமும்…’ – இது ரிக்கி பான்டிங் பார்வை  | Shreyas Iyer’s pride and arrogance… – Ricky Ponting’s view


கேப்டனாகவும், வீரராகவும் ஷ்ரேயஸ் அய்யர் நல்ல முதிர்ச்சியடைந்து விட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் பாராட்டியுள்ளார். இதன் மூலம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றுவிட்டது போல் ஆகிவிட்டது ஷ்ரேயஸ் அய்யருக்கு.

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கோப்பைக்கு இட்டுச் சென்றார். ஷ்ரேயஸ் அய்யரை ரிக்கி பான்டிங் அருகிலிருந்து வழிநடத்தியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் அய்யரின் வளர்ச்சியைப் பார்த்துள்ளார் ரிக்கி பான்டிங். 2019 மற்றும் 2021 ஐபிஎல் தொடர்களில் ஷ்ரேயஸ் அய்யர் – பான்டிங் கூட்டணி பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸை அழைத்துச் சென்றது. 2020-ல் இறுதிப் போட்டியும் கண்டனர்.

இப்போது பஞ்சாப் கிங்ஸிலும் இவர்கள் இருவரது கூட்டணி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை வெகுவாகப் பிரகாசமாக்கியுள்ளது, “அனுபவம் ஸ்ரேயஸை பட்டைத் தீட்டியுள்ளது” என்கிறார் ரிக்கி பான்டிங்.

நேற்று சிஎஸ்கேவின் 190 ரன்களை அனாயசமாக சேஸ் செய்து கொடுத்தார் ஸ்ரேயஸ் அய்யர். இதனையடுத்து பேசிய ரிக்கி பான்டிங், “அய்யர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கேப்டனாக கேகேஆருக்காக வென்றார். இதைச் செய்த பிறகே அனுபவம் அவர் பின்புலமாக உள்ளது. அவருக்கு தன்னம்பிக்கையும் அதிகமாகியுள்ளது.

டி20-யில் கேப்டன்சியில் சக்சஸ் ஆவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் அனைத்தும் வேகமாக நம்மைச் சுற்றி மாறிக்கொண்டேயிருக்கும் போது, நான்கும் ஆறுகளும் பறந்து கொண்டிருக்கும் போது அய்யர் தன்னுடைய அமைதியையும் விவேகத்தையும் பேணிக்காத்தார். ஆனால் ஓவர்கள் வீசுவதில் தாமதம் ஏற்படும் போது அவர் அத்தனை அமைதிகாக்கும் பொறுமையுடன் இருந்திருக்க மாட்டார். ஆனால் அவரது அனுபவம் மூலம் கிடைத்த முதிர்ச்சி அவரை வெற்றிகரமாக வழிநடத்துகிறது.

இப்போது ஒரு வீரராகவும் முதிர்ச்சியடைந்துள்ளார். முன்னெப்போதையும் விட ஆட்டத்தின் சூழ்நிலைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு திறமையுடன் கையாள்கிறார். வெற்றி ரன்களை தன்னால் அடிக்க முடியவில்லை என்பதில் அவர் ஏமாற்றம் அடைந்திருப்பார். ஆட்டத்தை இறுதி வரை நின்று வெற்றி பெற வைப்பதில் அவருக்கு நிறைய பெருமையும் கர்வமும் உண்டு.

நான் அவருடன் பணியாற்றுவதை விரும்புகிறேன், அனைத்து வீரர்களுடனும் நல்ல உறவுமுறையில் இருக்கிறார், அவர்களும் இவரை விரும்புகின்றனர். களத்திலும், வலையிலும் ஏன் விடுதி திரும்பிய பிறகும் அவர் வீரர்களுடன் உரையாடுவதில் வல்லவராக இருக்கிறார். நல்ல கிரிக்கெட்டை ஆடுவதில் அணி வீரர்கள் பெருமை கொள்கின்றனர்” என்றார்.