EBM News Tamil
Leading News Portal in Tamil

பவர்பிளேவில் அதிக ரன்களை வழங்கிவிட்டோம்: சொல்கிறார் டெல்லி கேப்டன் அக்சர் படேல் | We conceded too many runs in Powerplay Says Delhi captain Axar Patel


புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. 205 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 57 ரன்கள் தேவையாக இருந்தது.

அப்போது அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம் களத்தில் இருந்தனர். ஹர்ஷித் ராணா வீசிய 17-வது ஓவரில் இந்த ஜோடி 11 ரன்கள் விளாசியது. ஆனால் வருண் சக்ரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் அஷுதோஷ் சர்மா (7) ஆட்டமிழந்தார். இது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இதன் பின்னர் விப்ராஜ் நிகாம் போராடினார். ஆனால் அவரால் அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைக்க முடியாமல் போனது.

டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி 4 தோல்வி, 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “பந்துவீச்சின் போது பவர்பிளேயில் நாங்கள் 15 முதல் 20 ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்தோம். அதேவேளையில் இலக்கை துரத்திய போது சில விக்கெட்டுகளை இலகுவான முறையில் இழந்தோம்.

பவர்பிளேவுக்கு பிறகு கொல்கத்தா அணியை கட்டுப்படுத்திய விதம் நேர்மறையானது. சில பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட தவறினாலும் எங்களில் 2 முதல் 3 பேர் பங்களித்து ஆட்டத்தை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றோம். குறைந்த ரன்களிலேயே தோல்வியை சந்தித்துள்ளோம்.

விப்ராஜ் பேட்டிங் செய்யும் போது நம்பிக்கை இருந்தது. அஷுதோஷ் சர்மா களத்தில் இருந்திருந்தால் முதல் போட்டியை போன்று ஆட்டத்தை வென்றிருக்க முடியும். பயிற்சி ஆடுகளத்தில் டைவ் அடித்தபோது என் தோல் உரிந்தது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், 3-4 நாட்கள் இடைவெளி உள்ளது. இதனால் நான் குணமடைய முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.