EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: சூர்யவன்ஷியை சமாளிக்குமா மும்பை? | mumbai to play with rajasthan royals in jaipur today match preview suryavanshi


ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 14 புள்ளிகளுடனே லீக் சுற்றை நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே அமையும்.

ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 25 பந்துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்களிலேயே வெற்றி கண்டது. 14 வயதான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில், 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி மிரட்டினார். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்து பலம் சேர்த்தார். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, டிரெண்ட் போல்ட் உள்ளிட்டோருக்கு எதிராக சூர்யவன்ஷி எவ்வாறு விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன் காயம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினாலும் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஜோடியே தொடக்கத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று தடுமாறிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து அசுர பலத்துடன் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த அணியின் வீரர்களும் தங்களது பங்களிப்பை வழங்கத் தொடங்கி உள்ளது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக இடம் பெற்ற கார்பின் போஷ் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். மேலும் பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இன்றைய ஆட்டத்திலும் அவரிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். தொடக்க வரிசையில் ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மாவும் நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர் ஆகியோரும் பின்வரிசையில் ஹர்திக் பாண்டியாவும் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு துறைக்கு கடும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.