EBM News Tamil
Leading News Portal in Tamil

நட்பு ரீதியிலான கால்பந்தில் இந்தியா – தாய்லாந்து ஜூன் 4-ல் மோதல் | India Thailand to play in friendly football match on June 4


புதுடெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் ஜூன் 4-ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) நேற்று அறிவித்தது.

‘ப்ளூ டைகர்ஸ்’ என அழைக்கப்படும் இந்திய கால்பந்து அணி தற்போது ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்று இறுதிகட்ட போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் வரும் ஜூன் 10-ம் தேதி ஹாங்காங்குடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த ஆட்டத்துக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு தாய்லாந்து அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டம் உதவக்கூடும்.

இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதும் போட்டியானது ஜூன் 4-ம் தேதி தாய்லாந்தின் ரங்சித் நகரில் உள்ள தம்மாசாட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஃபிபா தரவரிசை பட்டியலில் இந்தியா 127-வது இடத்திலும், தாய்லாந்து 99-வது இடத்திலும் உள்ளன.

இதுவரை இந்தியா, தாய்லாந்து அணிகள் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்தியா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் தாய்லாந்து அணி 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 7 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

தாய்லாந்து, ஹாங் காங் அணிகளுக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணியினர் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த பயிற்சி முகாம் வரும் 18-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த முகாமை முடித்துக் கொண்டு 29-ம் தேதி இந்திய அணி, தாய்லாந்து புறப்பட்டுச் செல்கிறது.

ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் வங்கதேசம், சிங்கப்பூர், ஹாங் காங் ஆகிய அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தை வங்கதேச அணிக்கு எதிராக கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. அதேவேளையில் சிங்கப்பூர் – ஹாங் காங் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்திருந்தது. இதன் மூலம் 4 அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் உள்ளன.