இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைகிறார் சவுதி | Southee joins England cricket team as bowling consultant
லண்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சீசனில் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இருந்தார். ஆனால் இந்த சீசனில் அவர், கவுண்டி போட்டியில் விளையாட உள்ளதால் ஆலோசகராக செயல்படவில்லை. இதனால் 36 வயதான டிம் சவுதி இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்படக்கூடும் அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டிம் சவுதி கடந்த டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவர், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 391 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இங்கிலாந்து அணி கோடைகால சீசனை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட இந்த தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
இதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர் மே 29 முதல் ஜூன் 10 வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.