என் பேட்டிங் உத்தி என்ன? – வைபவ் சூர்யவன்ஷி பகிர்ந்த ‘பாயின்ட்’ | What is my batting strategy? – vaibhav suryavanshi shares
யார் பந்து வீசுகிறார்கள் என்பதில் மனதில் கொள்ளாமல், தன்னை நோக்கி வரும் பந்தை மட்டுமே பார்த்து விளையாடுவதே தனது உத்தி என்கிறார் இளம் பேட்டிங் புயல் சூர்யவன்ஷி.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தார் 14 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஒரே இன்னிங்ஸ்சில் பல சாதனைகளைப் படைத்த வைபவ் சூர்யவன்ஷி, “நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை; பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல் தொடரில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.
கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி செய்து வருகிறேன், அதற்கான முடிவுகள் தற்போது களத்தில் தெரிகின்றன. ஐபிஎல்லில் சதம் அடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. நான் முன்பு கூறியது போல், நான் பல நாட்களாக கடுமையாக உழைத்து வருகிறேன், அதன் முடிவுகள் மைதானத்தில் தெரிகின்றன.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். ஏனெனில் அவர் நேர்மறையான விஷயங்களைப் பேசுகிறார், என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார், எனவே விளையாடுவது எளிதாக இருக்கிறது” என்றார் வைபவ் சூர்யவன்ஷி.
இதனிடையே, வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறனை பாராட்டியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அவருக்கு அறிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “இது வைபவ் சூர்யவன்ஷியின் நாள். அவரது அதிரடி அபாரமானது, தனது ஆட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். பவர்பிளேயில் அவர்கள் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தனர். பாராட்டுகளை அவர்களையே சேரும். நாங்கள் இரண்டு விஷயங்களை சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால், வெளியே உட்கார்ந்திருக்கும்போது அந்த விஷயங்களைச் சொல்வது எளிது, சில வாய்ப்புகள் எங்கள் வழியில் வந்தன, ஆனால் நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை” என்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இளம் வயதில் சதம் கண்ட சாதனையாளர் ஆன வைபவ் சூர்யவன்ஷி நேற்று இந்தச் சாதனையை நிகழ்த்தும்போது அவர் வயது 14 ஆண்டுகள் 32 நாட்கள். இதற்கு முன்பு விஜய் ஸோல் என்ற வீரர் 2013-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய போது அவருக்கு 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெயில் எடுத்த 30 பந்து சதத்துக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷி இரண்டாம் இடத்தில் 35 பந்துகளில் சதம் எடுத்து நிற்கிறார். ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் எடுத்தச் சாதனையை வைத்திருந்த இந்திய வீரர் யூசுப் பதான் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி உடைத்தார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் எடுத்திருந்ததை இவர் 35 பந்துகளில் எடுத்து உடைத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் ஐபிஎல் சதம் கண்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் 101 ரன்களில் 93.06% பவுண்டரிகளிலேயே விளாசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது 101 ரன்களில் 94 ரன்கள் பவுண்டரி, சிக்ஸர்களிலேயே வந்துள்ளது. இதற்கு முன்னர் 2024-ல் மேகாலயா அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா எடுத்த 106 நாட் அவுட் இன்னிங்ஸில் 92% பவுண்டரிகளிலேயே வந்தது, அந்தச் சாதனையையும் உடைத்தார் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.