அங்கத் பும்ரா மீது விமர்சனம்: சஞ்சனா கணேசன் வேதனை | sanjana ganesan shuts down trolls on angad bumrah
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை ஜஸ்பிரீத் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தனது ஒன்றரை வயது குழந்தையான அங்கத்துடன் கேலரியில் அமர்ந்து பார்த்தார்.
இந்நிலையில் குழந்தையின் முகபாவணை காட்சிகளை ஒருதரப்பினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கருத்துகளை பதிவு செய்தனர். இது அதிகளவில் பரவியது.
இந்நிலையில் இந்த பதிவுகளுக்கு சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், கூறியிருப்பதாவது: எங்களது மகன் உங்களது பொழுபோக்குக்கான தலைப்பு இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவும், நானும் அங்கத்தை சமூக ஊடகங்களிலிருந்து விலக்கி வைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், ஏனெனில் இணையம் ஒரு வெறுக்கத்தக்க, இழிவான இடம், கேமராக்கள் நிறைந்த ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு குழந்தையை அழைத்து வருவதன் தாக்கங்களை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். சமூக வலைதளங்களில் உள்ளவர்கள் வெறும் 3 விநாடி வீடியோவை வைத்து அங்கத் பும்ரா யார்? அவர் எப்படிப்பட்டவர்? என தீர்மானிக்கின்றனர்.
ஒரு குழந்தை மீது மனச்சோர்வு போன்ற சொற்களைச் எறிவது ஒரு சமூகமாக நாம் யார் என்பதைப் பற்றி அதிகம் கூறுகிறது, இது உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கள் மகனைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது, எங்கள் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாது, உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் உண்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சஞ்சனா கணேசன் கூறியுள்ளார்.