டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது ‘அதிசயன்’ வைபவ் சூர்யவன்ஷி! | 14 year old miracle Vaibhav Suryavanshi rewrote T20 records with century in ipl
ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி புதுமுகம் வைபவ் சூர்யவன்ஷி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தந்ததோடு பல டி20 சாதனைகளையும் உடைத்து நொறுக்கினார்.
வைபவ் சூர்யவன்ஷியின் காட்டடி தர்பாரில் சிராஜ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா என அனைவரும் சிக்கிச் சீரழிய, ஆப்கானின் லெக் ஸ்பின் ஜீனியஸ் ரஷித் கான் மட்டும் சிக்கவில்லை. ரஷித் கான், தன் 4 ஓவர்களில் 10 டாட் பால்களை வீசினார். 1 பவுண்டரி ஒரு சிக்ஸர் மட்டுமே கொடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் உடைத்த சாதனைகள் சில: > ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இளம் வயதில் சதம் கண்ட சாதனையாளர் ஆனார். நேற்று இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தும் போது அவர் வயது 14 ஆண்டுகள் 32 நாட்கள். இதற்கு முன்பு விஜய் ஸோல் என்ற வீரர் 2013-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசிய போது அவருக்கு 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
> கிறிஸ் கெயில் எடுத்த 30 பந்து சதத்திற்குப் பிறகு சூர்யவன்ஷி இரண்டாம் இடத்தில் 35 பந்துகளில் சதம் எடுத்து நிற்கிறார்.
> ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் எடுத்தச் சாதனையை வைத்திருந்த இந்திய வீரர் யூசுப் பதான் சாதனையை சூர்யவன்ஷி உடைத்தார். யூசுப் பத்தான் 37 பந்துகளில் சதம் எடுத்திருந்ததை இவர் 35 பந்துகளில் எடுத்து உடைத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் ஐபிஎல் சதம் கண்டுள்ளார்.
> அனைத்து டி20 போட்டிகளிலும் 200 ரன்களுக்கும் மேற்பட்ட இலக்கை 15.5 ஓவர்களில் ராஜஸ்தான் விரட்டி வெற்றி பெற்றது, ஆகக்குறைந்த ஓவர்களில் சேஸிங் செய்த பெருமையை எட்டியது.
> சூர்யவன்ஷியின் 101 ரன்களில் 93.06% பவுண்டரிகளிலேயே விளாசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது 101 ரன்களில் 94 ரன்கள் பவுண்டரி, சிக்ஸர்களிலேயே வந்துள்ளது. இதற்கு முன்னர் 2024-ல் மேகாலயா அணிக்கு எதிராக அபிஷேக் சர்மா எடுத்த 106 நாட் அவுட் இன்னிங்ஸில் 92% பவுண்டரிகளிலேயே வந்தது, அந்தச் சாதனையையும் உடைத்தார் சூர்யவன்ஷி.
> அதே போல் இளம் வயதில் அரைசதம் விளாசிய சாதனையையும் சூர்யவன்ஷி நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் முகமது நபியின் மகன் ஹசன் இசக்கில் அதிவேக அரைசதம் அடித்த போது அவருக்கு வயது 15. ஆகவே இந்த சாதனையும் இப்போது சூர்யவன்ஷி கையில்.
> முதல் விக்கெட்டுக்காக சூர்யவன்ஷி – ஜெய்ஸ்வால் ஜோடி சேர்த்த 166 ரன்கள் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்னர் ஜாஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக 155 ரன்களை ஓப்பனிங்கில் எடுத்ததே சிறந்த பார்ட்னர்ஷிப்.
> அதே போல் முரளி விஜய்யும் 11 சிக்ஸ், சூர்யவன்ஷியும் 11 சிக்ஸ். இந்திய வீரர்கள் இருவர் அதிக ஐபிஎல் சிக்சர்களை ஒரு இன்னிங்ஸில் அடித்த வகையில் இருவரும் சமமாக உள்ளனர்.
> சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக அடித்த 10 சிக்ஸர்கள் சாதனையை தன் 11 சிச்ஸர்களால் முறியடித்தார் சூர்யவன்ஷி.
> கரிம் ஜனத் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் சூர்யவன்ஷி விளாசிய 30 ரன்கள் இன்னொரு சாதனை, அதாவது ஐபிஎல் அறிமுக பவுலர் ஒரே ஓவரில் இவ்வளவு ரன்கள் விளாசப்பட்டதில்லை. முன்பு வருண் சக்ரவர்த்தி ஒரே ஓவரில் தன் அறிமுக போட்டியில் 25 ரன்கள் கொடுத்ததுதான் சாதனையாக இருந்தது.