‘சாய் கிஷோர் சிறப்பாக செயல்படுகிறார்’ – டேனியல் வெட்டோரி பாராட்டு | srh coach daniel vettori praised sai kishore ipl 2025
சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. 155 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி கண்டது.
போட்டி முடிவடைந்ததும் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்
டேனியல் வெட்டோரியிடம், நடப்பு சீசனில் எந்த இடகை சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படுகிறார் என கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “குஜராத் அணியின் சாய் கிஷோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இதேபோன்று மும்பை அணியில் மிட்செல் சாண்ட்னர், சிஎஸ்கேவில் ஜடேஜா ஆகியோரும் ஒரு சில ஆட்டங்களில் கிடைத்த வாய்ப்புகளில் பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிராரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
சாய் கிஷோர் அற்புதமான பந்துவீச்சாளர். ஏலத்தில் நாங்கள் அவரை மிகவும் உன்னிப்பாக கவனித்தோம். அவரை அணிக்கு தேர்வு செய்ய விரும்பினோம். குறுகிய வடிவிலான போட்டிக்கான அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளன.
சாய் கிஷோர் மிகவும் தைரியமானவர். பந்தை சுழற்றும் திறன், வேகத்தை மாற்றி அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து வீசும் திறன் ஆகியவற்றை கொண்டவர். இது மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கான ஒரு மாதிரியை அமைக்கிறது என்று நினைக்கிறேன். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்ளிலும் சாய் கிஷோர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஹைதராபாத் ஆடுகளத்திலும் விதிவிலக்காக அவர், சிறப்பாக பந்து வீசினார். சாய் கிஷோர் நம்பமுடியாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்” என்றார்.