“சிஎஸ்கே அணியை கடவுள் தண்டிக்கிறார் என்றே நினைக்கிறேன்!” – கும்ப்ளே வேதனை | It seems like God punishing CSK says Anil Kumble ipl 2025
சிஎஸ்கே நேற்று முதல் முறையாக சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்று நடப்பு ஐபிஎல் தொடரில் 7-வது தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘பேபி ஏபிடி’ என்று வந்த புதிதில் வர்ணிக்கப்பட்ட டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.
பிரேவிஸ் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருக்கையில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை கவர் திசையில் தூக்கி அடிக்க அங்கு கமிந்து மெண்டிஸ் அட்டகாசமான, நம்ப முடியாத, பிரமிப்பூட்டும் கேட்சை எடுத்தார். இதனால் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் என்றிருந்த சென்னை 180 ரன்களைக் குவிக்க முடியாமல் போனதும் தோல்விக்குக் காரணமானது.
இந்நிலையில், பிரேவிஸ் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்த இந்திய அணியின் முன்னாள் நம்பர் 1 ஸ்பின்னரும், கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே பிரமித்துப் போனதாகத் தெரிவித்தார். அதே வேளையில் அவரது விக்கெட் இந்த ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேட்சுக்கு விழுந்ததை அடுத்து ‘சிஎஸ்கே அணியை கடவுள் தண்டிப்பது போல் தோன்றுகிறது’ என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
பிரேவிஸ் குறித்து அவர் கூறும்போது, “அவர் ஸ்பின்னை ஆடும் விதம் தனிச் சிறப்பானது. சென்னைப் பிட்ச் சுலபமானதல்ல. அதில் பந்துகள் இரண்டு விதமான வேகத்தில் சீரற்ற முறையில் வரும். சில பந்துகள் பிட்சில் நின்று வரும். பிரேவிஸ் தென் ஆப்பிரிக்காவில் இத்தகைய பிட்ச்களில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் யு-19 போட்டிகளில் ஓரிரு முறை சிறப்பாக ஆடியுள்ளார். இப்படித்தான் அவர் ஐபிஎல்-க்குள் வந்தார்.
அதுவும் முதலில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இப்போதும் பதிலி வீரராகவே அணிக்குள் தேர்வு செய்யப்பட்டார். 2011-ல் கிறிஸ் கெயில் இப்படித்தான் ரீப்ளேஸ்மெண்ட் வீரராக நுழைந்து பிறகு யுனிவர்ஸ் பாஸ் ஆகி பெரிய பிம்பம் ஆனார். பிரேவிஸிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. ரச்சின் ரவீந்திரா, மாத்ரே மற்றும் பதிரனாவுடன் சிஎஸ்கே அணியைக் கட்டமைக்க இளம் படை உள்ளது. பிரேவிஸ் ஒரு நீண்ட கால சொத்தாக சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்” என்று கூறினார் அனில் கும்ப்ளே.
அவர் தன் எக்ஸ் தளப் பக்கத்தில், “டெவால்ட் பிரேவிஸ் மட்டுமே ஏதோ தீவிரம் காட்டினார். ஆனால் அவரது இன்னிங்ஸும் தொடரின் ஆகச்சிறந்த கேட்சினால் முடிந்தது. சிஎஸ்கேவுக்கு எதிராக அனைத்தும் உள்ளன. சீசனில் ஆகச்சிறந்த கேட்சும் அவர்களுக்கு எதிராகவே எடுக்கப்பட்டுள்ளது. சென்னையைக் கடவுள் தண்டிக்கிறார் என்று தோன்றுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.