“தோனி விளையாடுவது பிராண்ட், பெயர், ரசிகர்களுக்காகவே!” – சுரேஷ் ரெய்னா | Dhoni plays for brand name and fans in ipl 2025 says Suresh Raina
நடப்பு ஐபிஎல் சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் தோனி வீரர்கள் தேர்வில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா, அவர் ஈடுபாடு காட்டியிருந்தால் ஏலத்தில் வீரர்கள் தேர்வில் தவறுகள் நடந்திருக்காது என்றார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடக நிறுவனத்துக்கு இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியது: “எம்.எஸ்.தோனிதான் இறுதி முடிவை எடுப்பார் என்று அவர்கள் எப்போதும் கூறுவார்கள். ஆனால், நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் எந்த ஏலத்திலும் நேரடியாகப் பங்கேற்றதில்லை. அந்த விவாதங்களிலும் நான் கலந்து கொண்டதில்லை. தக்கவைத்த வீரர்கள் பற்றியே நான் பேசியிருக்கிறேன். ஒரு வீரரை ஏலம் எடுக்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தோனிக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்து தோனி அவ்வளவாக இதில் ஈடுபாடு காட்டவில்லை என்றே தோன்றுகிறது.
சிஎஸ்கேவின் மைய நிர்வாகக் குழுவே ஏலத்தில் தீர்மானங்களை எடுக்கின்றனர். தோனி வேண்டுமானால் என்ன தெரிவித்திருக்கலாம் என்றால் 4-5 வீரர்கள் தேவை என்று கூறியிருக்க வாய்ப்பிருக்கிறது. அவர் அன்-கேப்டு பிளேயராகக் கடுமையாக உழைக்கிறார். 43 வயதில் இன்னும் அணிக்காக அனைத்தையும் கொடுக்கிறார். தோனி பிராண்டுக்காக ஆடுகிறார். அவர் தன் பெயருக்காகவும், ரசிகர்களுக்காகவும்தான் ஆடுகிறார். ஆனாலும் இன்னும் முயற்சி எடுத்து ஆடுகிறார். 43 வயதில் விக்கெட் கீப்பிங் செய்கிறார். கேப்டன்சியில் அணியின் பொறுப்பைச் சுமக்கிறார். மற்ற 10 வீரர்கள் என்ன செய்கின்றனர்?
ரூ.18 கோடி, ரூ.17 கோடி, ரூ.12 கோடி பெறுபவர்கள் கேப்டனின் கோரிக்கைக்கு தன் பங்கைச் செலுத்துவதில்லை. குறிப்பாக சில அணிகளுடன் தோற்றதேயில்லை. ஆனால், இப்போது தோற்கிறார்கள் என்றால் அதை முதலில் சரி செய்ய வேண்டும். யார் மேட்ச் வின்னர் என்பதை அடையாளம் காண வேண்டும். அடுத்த போட்டிக்கும் இந்த வீரரை நம்பலாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சில வீரர்கள் வருடக்கணக்காக அங்கு ஆடி வருகின்றனர். ஆனால் முடிவு என்ன? தோல்விதான். இதே தவறுகள் ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. ஏலத்தில் வீரர்களைச் சரியாக தேர்வு செய்யவில்லை என்பது தோனிக்கு தெரியும். அவர் இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார்” என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.