மெகா ஏலத்தில் ‘உத்தி’ மிஸ் ஆனதா? – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஓபன் டாக் | Did we miss trick in mega auction CSK coach Fleming opens up ipl 2025
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் 9 ஆட்டங்களில் விளையாடி அதில் ஏழு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியது: “இந்த சீசனை முன்னிட்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் நாங்கள் ஏதேனும் ட்ரிக்கை மிஸ் செய்தோமா என்ற கேள்வி எழுகிறது. அதை சொல்வது மிகவும் கடினமானது. எங்கள் அணியின் செயல்திறன் மற்றும் எங்களின் ஆட்ட பாணி, டி20 கிரிக்கெட்டின் மாற்றத்தை கருத்தில் கொண்டிருந்தோம். இதை வைத்து அணியை கட்டமைப்பது எளிதான காரியம் அல்ல. மற்ற அணிகளும் இதையே தான் செய்தன.
ஆனால், அதே நேரத்தில் அதில் தான் எங்களது சக்சஸ் அடங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக எங்களது ஆட்டத்தில் நிலை தன்மை இருந்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறோம். ஏலம் ஒன்றும் அறிவியல் அல்ல. இந்த முறை அதற்கான சரியான பலன் முறையாக எங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் டெவால்ட் பிரெவிஸ் கொடுத்த கேட்ச்சை கமிந்து மென்டிஸ் பிடித்திருந்தார். அது ஆட்டத்தில் எங்கள் வெற்றியை பறித்த கேட்ச். இது போல இந்த சீசனில் எங்களுக்கு நிறைய நடந்துள்ளது. ராஜஸ்தான் உடனான ஆட்டத்தில் ரியான் பராக் அப்படியான கேட்ச் ஒன்றை எங்களுக்கு எதிராக பிடித்திருந்தார்.
ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் முனைப்பு காட்டி இருந்தனர். அதை தான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். பந்து வீச்சிலும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டோம். 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஒட்டுமொத்தமாக நேர்மறை செயல்திறனை வெளிப்படுத்தினோம். இருந்தாலும் சின்ன சின்ன தவறுகள் எங்களுக்கு பின்னடைவு தந்தது” என பிளெமிங் கூறியுள்ளார்.