EBM News Tamil
Leading News Portal in Tamil

சின்னசாமி மைதானத்தில் ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டோம்: சொல்கிறார் விராட் கோலி | We have found a way to score runs at Chinnaswamy Stadium: Virat Kohli IPL 2025


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்கு தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியாக இது அமைந்தது.

அந்த அணி இதற்கு முன்னர் சொந்த மைதானத்தில் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த ஆட்டங்களில் முதலில் பேட் செய்த போதெல்லாம் பெங்களூரு அணி 170 ரன்களை கூட எட்டியது இல்லை. ஆடுகளம் மந்தமாக இருப்பதாக பேட்டிங் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து மிரட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும் தேவ்தத் படிக்கல் 27பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசினர். டிம் டேவிட் 23, பில் சால்ட் 26, ஜிதேஷ் சர்மா 20 ரன்கள் சேர்த்தனர். 206 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49, துருவ் ஜூரெல் 47 ரன்கள் சேர்த்தனர். பெங்களூரு அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4, கிருணல் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். பெங்களூரு அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

போட்டி முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறியதாவது: வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக சில விஷயங்களைப் பற்றி விவாதித்தோம், மேலும் ஸ்கோர் போர்டில் போதுமான அளவு ரன்களை பெறுவதற்கு எங்களை நாங்களே நன்றாகப் பயன்படுத்தினோம். இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு உதவியது. எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பாராட்டியாக வேண்டும். அவர்கள் நல்ல ஷாட்களை விளையாடினர், ஆனால் எங்கள் வழியைத் திரும்பிப் பிடித்து 2 புள்ளிகளைப் பெறுவது மிகவும் முக்கியமானது.

இந்த மைதானத்தில் முதல் சவால் டாஸ் வெல்வது, இரண்டாவது பாதியில் இது ஒரு நன்மையாக மாறும், முதல் சில ஆட்டங்களில் ஒரு நல்ல ஸ்கோரைப் பெற நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இந்த போட்டிக்கான டெம்ப்ளேட் யாரேனும் ஒருவர் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும், மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதுதான். இது உண்மையில் பலனளித்தது.

முதல் 3-4 ஓவர்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. கடந்த 3 ஆட்டங்களில் நாங்கள் அதிக ஷாட்களை வலுக்கட்டாயமாக விளையாட முயற்சித்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் நாங்கள் பந்தை மட்டைக்கு வர அனுமதித்தோம், பேட்டிங்கில் எங்களை சரிசெய்தோம். இதனால் விஷயங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

பேட்டிங் செய்வதற்கான வழியை இப்போது கண்டுபிடித்துள்ளோம். சொந்த மைதானத்தில் அடுத்து நடைபெறும் சில ஆட்டங்களில் கூடுதலாக 15 முதல் 20 ரன்களை பெறுவதற்கான சிறந்த நிலையில் நாங்கள் இருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளை விளையாட இந்த மைதானம் சிறந்த இடம். இங்கு சிறப்பாக செயல்பட்ட போதும், மோசமான காலங்களிலும் ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர். பெங்களூரு மைதானம் சிறப்பான இடம், இங்கு நிறைய சிறப்பான நினைவுகள் உள்ளது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.