முதல்முறையாக சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஹைதராபாத் | ஐபிஎல் 2025 | Hyderabad beats CSK for the first time in Chepauk IPL 2025
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் களத்துக்கு வந்த சிஎஸ்கே அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர்.
கடந்த போட்டிகளில் நன்றாக ஆடி கவனம் ஈர்த்த ஷேக் ரஷீத் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். எதிர்முனையில் இருந்த ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 9 ரன்களுடன் வெளியேறவே, ஜடேஜா 21 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக டெவால்ட் ப்ரெவிஸ் 25 பந்துகளுகு 42 ரன்கள் எடுத்து அசத்தினார். துபே 12, தீபக் ஹூடா 22, தோனி 6 அன்ஷுல் கம்போஜ் 2 என சிஎஸ்கே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 154 அடித்திருந்தது.
155 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 2வது பந்தில் வெளியேறவே, ஹெட் 19 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் அதிகபட்ச ஸ்கோராக 42 ரன்கள் எடுத்தார். கிளாசன் 7, அனிகெத் வர்மா 19, கமிந்து மெண்டிஸ் 32, நிதிஷ் ரெட்டி 19 என 18.4 ஓவர்களின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி.
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சிஎஸ்கே அணியை, ஹைதராபாத் அணி வென்றது இல்லை. அந்த அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி இரு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடி இருந்தன. இதில் சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த நிலையில், முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியுள்ளது ஹைதராபாத் அணி.