EBM News Tamil
Leading News Portal in Tamil

அந்த 19-வது ஓவர்… ஹேசில்வுட் பவுலிங் வெற்றியின் ரகசியம் என்ன? | That 19th over – What the secret to Hazlewood bowling success


பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி தங்களது முதல் வெற்றியை ருசித்ததற்கு முக்கிய காரணம், ஜாஷ் ஹேசில்வுட்டின் இரண்டு ஓவர்கள். அதிலும் குறிப்பாக, அந்த 19-வது ஓவர் நிச்சயம் டி20 கிரிக்கெட்டில் அனைத்துப் பவுலர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைக் கொண்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துருவ் ஜுரெல், ஷுபம் துபே புவனேஷ்வர் குமார் ஓவரை துவைத்து எடுத்து 22 ரன்களை விளாசிய தருணம், ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் சென்றுவிட்டது. ஆர்சிபி ரசிகர்கள், ‘அடப் போடா மறுபடியும் தோல்வியா?’ என்று சோர்வடைந்து போயினர். ஏனெனில் 12 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்குத் தேவை வெறும் 18 ரன்களே.

அப்போதுதான் ஆர்சிபி ரசிகர்களால் செல்லமாக ‘Hazlegod’ என்று அழைக்கப்படும் ஹாசில்வுட் 19-வது ஓவரை வீச வந்தார். சாதாரணமாக அத்தகைய தருணங்களில் ஒரு கண்டிப்பான களவியூகம் அமைத்து யார்க்கர், ஸ்லோ பந்துகளையே வீசுவார்கள், இதற்குப் பேட்டர்களும் தயாராக இருப்பார்கள். ஆனால், ஹேசில்வுட் வீசிய விதமே அலாதிதான்.

ஹேசில்வுட் ஒரு பேக் ஆஃப் லெந்த் பந்துகளை தனது உயரச் சாதகத்துடன் கையை மேலே தூக்கி உயரமான இடத்தில் இருந்து பந்தை ரிலீஸ் செய்வதால் பவுன்ஸ் நன்றாகக் கிடைக்கும். நேற்றும் அவருக்கு அந்த பவுன்ஸ் கிடைத்தது. இந்த கடினமான லெந்த்தோடு யார்க்கர், ஸ்லோ பந்து என்று வெரைட்டியில் முதன்மையாகத் திகழ்ந்தார்.

அந்த ஓவரில் வெறும் 1 ரன்னை மட்டுமே கொடுத்து ஜுரெல் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதனையடுத்து கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட யாஷ் தயால் சிறப்பாக அந்த ஓவரை வீசி ஆர்சிபி வெற்றியை உறுதி செய்தார்.

டெத் ஓவர்களில் இந்த முறை ஹாசில்வுட் 59 பந்துகள், அதாவது கிட்டத்தட்ட 10 ஓவர்களை வீசியுள்ளார். 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கேவின் மதீஷ் பதிரணாதான் டெத் ஓவர்களில் 7 விக்கெட்டுகள் என்று முன்னிலை வகிக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிராக சாத்து வாங்கிய ஹேசிசில்வுட் தன் பந்துவீச்சையும் லெந்த்தையும் கண்டுப்பிடித்துக் கொண்டார். நேற்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசினாலும் ஹேசில்வுட்டின் கடினமான லெந்த் பந்துகளை அடிக்க முடியாமல் திணறியதையும் பார்க்க முடிந்தது. கடைசியில் அதே கடினமான பேக் ஆஃப் லெந்த் பந்தில்ஜெய்ஸ்வாலைக் கொடியேற்ற வைத்தார்.

ஹாசில்வுட் கூறும்போது, “6-8 மீ லெந்த்தில் வீச வேண்டும், பேட்டரை முன்னால் வரச் செய்ய வேண்டும் ஆனால், ஓவர் பிட்ச் அல்லது ஹாஃப் வாலி பந்தை வீசக் கூடாது” என்று தன் பவுலிங் வெற்றி ரகசியத்தை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

19-வது ஓவர் பேசுபொருளாக அமைந்தாலும் ஹேசில்வுட் வீசிய 17-வது ஓவரும் முக்கியமானது. அப்போது ராஜஸ்தானுக்கு 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவை. அப்போது ஹெட்மையர் விக்கெட்டைக் கைப்பற்றி வெறும் 6 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் ஹேசில்வுட் வீழ்த்திய 16 விக்கெட்டுகளில் 13 விக்கெட்டுகள் ஆர்சிபி இலக்கைத் தடுக்கும் போது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி தனது கோப்பை வறட்சியைப் போக்கி ஐபிஎல் 2025 கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அதில் ஹேசில்வுட் பங்கு மிக மிக முக்கியம்.