EBM News Tamil
Leading News Portal in Tamil

இஃப்திகார் அகமது பவுலிங் ‘த்ரோ’ தான்: நியூஸி. வீரர் பகிரங்க குற்றச்சாட்டு | Iftikhar Ahmed bowling is a throw: New Zealand Batter Colin Munro accusation


பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி கடும் சர்ச்சைகளுக்கு இடமாகியுள்ளது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இலக்கை விரட்டிக் கொண்டிருந்தபோது நியூஸிலாந்து தொடக்க வீரர் கொலின் மன்ரோ, பந்து வீசிக்கொண்டிருந்த முல்தான் சுல்தான்ஸ் பவுலர் இஃப்திகார் அகமதின் ஆக்‌ஷன் த்ரோ தான், பவுலிங் அல்ல என்பது போல் செய்கை செய்தது கடும் சர்ச்சைகளுக்குள்ளானது.

இதில் கடும் கோபமடைந்த இப்திகார் அகமது ஸ்கொயர் லெக் நடுவரிடம் சென்று புகாரிட்டார். இதனையடுத்து, முல்தான் சுல்தான்ஸ் கேப்டன் ரிஸ்வானும் கூட இணைந்து கொலின் மன்ரோவுடன் கடும் வாக்குவாதம் செய்தார். இப்திகார், மன்ரோ, ரிஸ்வான் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் உச்சத்திற்குச் செல்லும் போல் ஆனது.

இதில் மன்ரோவுக்கும் ரிஸ்வானுக்கும் மட்டும் ஆட்டத் தொகையில் 30% அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் மேட்ச் ரெஃப்ரீ அலி நக்வி. கடும் வாக்குவாதம் புரிந்த இப்திகாருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

மன்ரோவும் ரிஸ்வானும் ஆக்ரோஷத்தின் எல்லையை மீறியதாக நடுவர்களால் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இப்திகார் பவுலிங் ஆக்‌ஷன் குறித்து இதுவரை எந்த ஒரு புகாரையும் நடுவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு போட்டியிலும் எழுப்பியதில்லை.

எதிரணி வீரர் ஒருவர் பாகிஸ்தான் பவுலரின் ஆக்‌ஷனை விதிமீறல், த்ரோ என்று மைதானத்திலேயே சொல்வது இது முதல் முறையல்ல. இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் தொடர் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாகிஸ்தான் பவுலர் முகமது ஹஸ்னைனின் ஆக்‌ஷன் த்ரோ என்று பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இத்தனைக்கும் ஹஸ்னைன் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அப்போதுதான் கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருந்தார்.

2018-ல் நியூஸிலாந்தின் மூத்த பேட்டர் ராஸ் டெய்லர், முகமது ஹபீஸ் ஆக்‌ஷன் த்ரோ என்று குற்றம்சாட்டினார். ஹபீஸ் த்ரோதான். ஏனெனில் அவர் 3 முறை இதற்காகவென்றே தடைசெய்யப்பட்டவர். ஏற்கெனவே பாகிஸ்தான் புதிர் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் ஆக்‌ஷன் த்ரோ என்று அவர் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டு பிறகு ஆக்‌ஷனைத் திருத்திக் கொண்ட பிறகு மீண்டும் வந்து வீசினார். ஆனால், பவுலிங் பழைய வலுவில்லாமல் சொத்தையாகி அடி வாங்கத் தொடங்கியதையும் விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டதையும் பார்த்தோம்.

எது எப்படியிருந்தாலும் பவுலிங் போடாமல் ‘சக்கிங்’ செய்வது ஏற்றுக் கொள்ள முடியா ஒரு விதிமீறலாகும். இது போன்ற பவுலர்களை அனுமதிப்பது நன்கு பயிற்சி செய்து பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்டு வந்து வீசும் உருப்படியான பவுலர்களுக்கு இழைக்கும் அநீதியாகி விடும். ஆகவே பேட்டர்கள், பவுலர் த்ரோ செய்தால் உடனடியாக ஸ்கொயர் லெக் அம்பயர் அவர் ஆக்‌ஷனை சரிபார்க்கும் பழைய முறையை ஐசிசி கொண்டு வர வேண்டும்.