EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: ஹைதராபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி புலம்பல் | We misjudged the pitch: Daniel Vettori IPL 2025


ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 8, இஷான் கிஷன் 1, நித்திஷ் குமார் ரெட்டி 2, அங்கித் வர்மா 12 ரன்களில் நடையை கட்டினர்.

35 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் அபினவ் மனோகர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசியதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது.

144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தனர்.

இதே ஆடுகளத்தில்தான் இந்த சீசனில் இரு முறை 240 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கையில் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் சரிவு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. போட்டி முடிவடைந்ததும் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி கூறியதாவது:

டாஸ் முக்கியமானது, நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். ஆடுகளம் நாங்கள் முன்பு பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது, இந்த ஆடுகளத்தில் 250 முதல் 280 ரன்கள் சேர்க்க முடியும் என விவாதித்தோம். ஆனால் நிலைமைகள் வியத்தகு முறையில் மாறின. சராசரியான ஸ்கோரை மதிப்பிடுவது கடினமாக இருந்தது.

2 ஓவர்களைக் கடந்தவுடன், கடந்த ஆட்டங்களில் சேர்க்கப்பட்டது போன்று இது 250 முதல் 260 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம் அல்ல என உணர்ந்தோம். பவர்பிளேவை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக விக்கெட்களை இழந்தோம். ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை என்பதை உணர்ந்ததும் ஸ்கோரை 180 ஆக கட்டமைக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பவர்பிளேவில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த பிறகு அதை அடைவது கடினம்.

இஷான் கிஷன் ஆட்டமிழந்து வெளியேறியது ஏமாற்றம் அளித்தது. அவர், ஆட்டமிழந்தது அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. பவர்பிளேவில் விளையாடும் போது, பீல்டிங் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர்கள். அவர்கள், ஆட்டத்தை கையில் எடுத்துக்கொள்பவர்கள். இது எங்களுக்கு ஏராளமான வெற்றிகளை கொடுத்துள்ளது. அவர்கள் வெற்றிகரமாக செயல்படாத நேரங்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பை ஏற்று செயல்பட வேண்டும். இந்த சீசனில் இந்த திறன் எங்களிடம் இல்லை. ஒன்று அல்லது இரண்டு வீர்கள் பார்ட்னர்ஷிப்களை அமைக்கும் திறனை பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு டேனியல் வெட்டோரி கூறினார்.

‘வைரல் ஆன இஷான் கிஷன் அவுட்‘ – மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 1 ரன் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பந்து லெக்சைடில் அவரது பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை. ஆனால் பந்து மட்டையில் பட்டதாக கருதி இஷான் கிஷன் தானாகவே களத்தில் இருந்து கிளம்ப முதலில் வைடு என்று சைகை செய்த களநடுவர் உடனடியாக அவுட் என்று கையை உயர்த்திவிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.