EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹைதராபாத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய மும்பை: ரோஹித், SKY விளாசல் | Mumbai beats srh advanced to 3rd place in points table Rohit SKY ipl 2025


ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது மும்பை. தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது மும்பை அணி.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த புதன்கிழமை அன்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார்.

ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே படு சறுக்கலாக அமைந்தது. 4.1 ஓவர்களில் அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். டிராவிஸ் ஹெட் (0), இஷான் கிஷன் (1), அபிஷேக் சர்மா (8), நிதிஷ் ரெட்டி (2) ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் 9-வது ஓவரில் அனிகேத் வர்மா 12 ரன்களில் வெளியேறினார். 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

பின்னர் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாஸன் மற்றும் அபினவ் மனோகர், 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 44 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கிளாஸன் ஆட்டமிழந்தார். 9 ஃபோர், 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். அபினவ் மனோகர், 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது ஹைதராபாத்.

மும்பை தரப்பில் போல்ட் 4, தீபக் சஹர் 2, பும்ரா 1, ஹர்திக் 1 விக்கெட் கைப்பற்றினர். 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் சேஸ் செய்தது. ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ரிக்கல்டன், 11 ரன்களில் 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடி ரன் குவித்தார் ரோஹித் சர்மா. கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்புக்கு அவர், இந்த ஆட்டத்தில் அதை தொடர்ந்தார். வில் ஜேக்ஸ், 22 ரன்களில் வெளியேறினார். 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார் ரோஹித். 8 ஃபோர்கள், 3 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

சூர்யகுமார் யாதவ், 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 5 ஃபோர்கள், 2 சிக்ஸர்களை அவர் விளாசினார். திலக், 2 ரன்கள் எடுத்தார். 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மேல ஏறி வரும் மும்பை: புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து மேல் நோக்கி முன்னேற்றம் கண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனில் முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, நான்கு தோல்விகளை தழுவி இருந்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருந்தது. இப்போது வரிசையாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு மும்பை முன்னேறி உள்ளது.